×

பெல்ஜியம் சாக்லேட்… சிக்மகளூர் காபி…

உலகளாவிய உணவுகளுக்காக புது கான்செப்ட்

‘‘அசைவ உணவுகள் ஒவ்வொன்றிலும் பலவிதமான வெரைட்டிகள் உள்ளது. அதே வெரைட்டிகளை சைவ உணவில் கொண்டு வர முடியாது என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். ஆனால் சைவ உணவுகளிலும் வெளிநாட்டு ஸ்டைலில் பல
உணவுகளை கொடுக்க முடியும்’’ என்கிறார் வசந்தபவன் ஓட்டலின் இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன். தென்னிந்திய உணவக வரலாற்றில் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தை நடத்தி வரும் வசந்தபவன் தனது சேவைப்பயணத்தில் 50ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இதுபற்றி கூறும்போது ஆனந்த் கிருஷ்ணன் மிகவும் நெகிழ்ந்துபோகிறார். ‘‘இந்த உணவகத்தை என் தாத்தாதான் முதலில் ஆரம்பித்தார். அவரைத் தொடர்ந்து அப்பா வழிநடத்தினார். அவர் பாரம்பரிய உணவினை அறிமுகம் செய்தார்.

இப்போது மூன்றாவது தலைமுறையாக நான் உலகளாவிய உணவுகளை அறிமுகம் செய்திருக்கிறேன். இது எங்க குடும்பத் தொழில். நான் ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட் முடிச்சிட்டு வெளிநாடுகளில் உள்ள உணவகத்தில் வேலை பார்த்தேன். அதன் மூலம் உலகளவில் உள்ள உணவுகள் குறித்து தெரிந்துகொள்ள முடிந்தது. அதன் அடிப்படையில் ஏற்கனவே எங்களின் ஒரு உணவகத்தில் பான் ஆசிய உணவுகளை வழங்கி வருகிறோம். அதையும் தாண்டி சைவ உணவுகளில் புதுமையைக் கொண்டு வரவேண்டும் என்று விரும்பினேன். அப்படி ஆரம்பிக்கப்பட்டது தான் ‘வி.பி வேர்ல்டு’ உணவகம். பொதுவாக ஸ்டார் ஓட்டல்களில் தான் எல்லா விதமான உணவுகள் கிடைக்கும். அதே போன்ற உணவினை சைவத்திலும் கொண்டு வர விரும்பினோம்.

குறிப்பாக எல்லா வயதினருக்கும் ஏற்ப ஒரு உணவகமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் தாத்தா, பாட்டி, அப்பா அம்மா மற்றும் குழந்தைகள் என்று பல வயதினர் இருப்பார்கள். எல்லாரும் ஒரே உணவினை விரும்புவதில்லை. தலைமுறைக்கு ஏற்ப உணவினை சுவைக்க விரும்புகிறார்கள். பெரியவர்கள் இட்லி தோசை என்றால், அடுத்த தலைமுறையினர் பிரைட் ரைஸ், பன்னீர் பட்டர் மசாலா ஆர்டர் செய்வார்கள். இன்றைய இளம் தலைமறையினரோ பீட்சா, திம்சம், கேப்சீன்னோ… ரகம். தென்னிந்திய உணவகங்களில் இதுபோன்ற அனைத்து உணவுகளும் இருக்காது. அங்கு பெரும்பாலும் இட்லி, தோசை, பொங்கல், மீல்ஸ்… இருக்கும். ஒரு சில உணவகங்களில் ஒரு படி மேலே போய் பிரைட் ரைஸ், பட்டர் நான், பன்னீர் மசாலா உணவுகளை வழங்குகிறார்கள்.

இவை மட்டுமில்லாமல் வெளிநாட்டு உணவுகளையும் ஒரே கூரையில் அனைவரின் விருப்பத்திற்கு ஏற்ப கொடுக்கிறோம்’’ என்றவர் இந்த உணவகம் உருவானது குறித்து பகிர்ந்துகொண்டார்.‘‘உலகளவிலான உணவுகளைக் கொடுக்க முடிவு செய்துவிட்டோம். அதற்கு ஏற்ப மெனுக்களை தயாரிக்க ஆரம்பித்தோம். அதற்கு முன் எங்க ஓட்டலின் உள் அலங்காரம் மூலம் நட்சத்திர ஓட்டல் போன்ற உணர்வினை கொடுக்க நினைச்சோம். பொதுவாக நட்சத்திர ஓட்டல்களில்தான் உயரமான கூரை மற்றும் கண்களை கவரும் விளக்குள் அமைக்கப்பட்டு இருக்கும். அதேபோல் இங்கு அமைத்திருக்கிறோம். அதனைத் தொடர்ந்து உள் அலங்காரம் எல்லாமே பார்த்து பார்த்து வடிவமைத்திருக்கிறோம். இது அனைவருக்குமான உணவகம் என்பதால், ஒவ்வொருவருக்கான இடத்தினை தனித்தனியாக அமைத்திருக்கிறோம்.

முதலில் காஷ்வல் பூத் சீட்டிங். தனியா வந்தா இங்கு காபி சாப்பிடலாம். அதன் பிறகு ரவுண்ட் டேபில் அமைப்பு நண்பர்களுடன் வருபவர்களுக்கு. குடும்பமாக வந்தால், அவர்களுக்கு என தனிப்பட்ட கேபின் போன்ற இடம். மேல்தளத்தில் பர்த்டே பார்ட்டி மற்றும் 25 பேர் கலந்துகொள்ளக்கூடிய விழாக்களுக்கான அமைப்பு. பிசினஸ் மீட்டிங் நடத்த கார்ப்பரேட் உணவுகளுடன் தனிப்பட்ட அறை. வசந்தபவன் ஆரம்பித்து 50 வருடங்களாகிறது. அந்த பயணத்திற்கு மேலும் ஒரு கிரீடம் அமைக்க விரும்பினேன். சொல்லப்போனால் எங்களின் 50 வருட உழைப்பிற்கான பரிசுன்னுகூட சொல்லலாம்’’ என்றவர் இங்கு வழங்கப்படும். உணவுகள் குறித்து விவரித்தார். ‘‘உணவகத்திற்குள் முதல் கவுன்டர் பேக்கரி மற்றும் காபி. பில்டர் காபி மட்டுமில்லாமல் காப்பசீனோ, லாட்டே, பாப்கார்ன், ஹேசில்நட், ரோஸ் என பல பிளேவர்கள் உள்ளது. அதேபோல் ஐஸ்கிரீம், மில்க்‌ஷேக்கிலும் பல வெரைட்டி உண்டு.

இதில் ஒவ்வொன்றையும் நம்முடைய சுவைக்கு ஏற்ப வடிவமைத்திருக்கிறோம். இதில் பயன்படுத்தப்படும் காப்பிக் கொட்டைகள், சாக்லெட், ஐஸ்கிரீம் அனைத்தும் மிகவும் உயர்தரமாக தயாரிக்கிறோம். அதாவது ஹேசில்நட் துருக்கியில் பேமஸ். சாக்லெட் என்றால் பெல்ஜியம், காபிக்கொட்டைகள் சிக்மகளூர் மற்றும் சீஸ் இந்தியா, இத்தாலி, பிரான்சில். இவை அனைத்தையும் அங்கிருந்து வரவழைக்கிறோம். அப்பத்தான் உண்மையான சுவையினை உணர முடியும். அடுத்து லைவ் கவுன்டரில் பீட்சா, திம்சம் இருக்கும். பீட்சாவிற்கு இத்தாலியின் மொசரெல்லா சீஸ் தவிர வேறு எதுவும் பயன்படுத்துவதில்லை. இப்படி ஒவ்வொரு உணவிற்கு ஏற்ப தனிப்பட்ட முறையில் க்யூரேட் செய்து இருக்கிறோம். உணவைப் பொருத்தவரை எதற்கும் காம்பிரமைஸ் செய்வதில்லை. சிலருக்கு பால் ஒத்துக்கொள்ளாது. அவர்களுக்கு தேங்காய்ப்பாலில் லாட்டே கொடுக்கிறோம். அதுதவிர பாதாம் மற்றும் ஓட்ஸ் பாலும் பயன்படுத்துகிறோம்.

உணவுகளில் ரெகுலர் உணவுகளான இட்லி, தோசை, பொங்கல், மீல்ஸ் இருந்தாலும், செட் மெனுக்களும் தருகிறோம். அதில் சோயாவில் கோலா உருண்டை, சாலட்ஸ் வகையில் கிரீக் பெஸ்டோ பீனட் சாலட், மலாய் புரோக்கலி, கிரிஸ்பி லோட்டஸ் ஸ்டெம், காப்பசீனோ வென்னிலா ஷாட்ஸ் போன்ற புது மெனுக்களை அறிமுகம் செய்திருக்கிறோம். இந்த மெனுக்கள் வருடத்திற்கு ஒருமுறை மாறும். அன்றைய தினத்தில் உலகளவில் டிரண்டிங்கா இருக்கும் மெனுக்களை ரீகிரியேட் செய்வோம். தற்போது 20 புதிய ஐட்டம்களை கொடுக்கிறோம். இவை அனைத்தும் உலகளவில் பரிமாறப்படும் உணவுகள் என்பதால், மக்களுக்கு புதுவித அனுபவமாக இருக்கும். அதற்காகவே எங்களின் கிச்சன் டீம் துரிதமாக செயல்பட்டு வருகிறது.

ஒவ்வொரு மெனுக்கள் குறித்தும் பல ஆய்வுகள் நடத்தப்பட்டு நம்முடைய சுவைக்கு ஏற்ப கொண்டு வந்திருக்கிறோம். சில உணவினை பாரம்பரியம் மாறாமல் கொடுக்கிறோம். ஒருசில உணவுகளை கொஞ்சம் மாற்றி அமைத்து அனைவரும் விரும்பும்படி அமைத்திருக்கிறோம். எங்களின் சிக்னேச்சர் டிஷ் ஸ்பெஷல் மீல்ஸ். சூப்பில் ஆரம்பித்து சப்பாத்தி, பிரியாணி என பல வெரைட்டி உணவுகளை தங்கத்தட்டில் பரிமாறுகிறோம். அடுத்து டப்பா மீல்ஸ். கிட்டத்தட்ட மினி மீல்ஸ் கான்செப்ட்தான் என்றாலும், இதனை ஹாட் பாக்ஸ் டப்பாக்களில் கொடுக்கிறோம். இதில் சாம்பார் சாதம், வெஜிடபில் பிரியாணி மற்றும் தயிர்சாதம் என அட்டகாசமாக இருக்கும்’’என்றார்.

– ப்ரியா
படங்கள் : ஆ.வின்சென்ட்பால்

வெயிலுக்கு உகந்த இளநீர் ஐஸ்க்ரீம்

பல்வேறு நன்மைகளைத் தந்து உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் சீப் அண்டு பெஸ்ட் பானம் என்றால் அது இளநீர்தான். இத்தகைய இளநீரில் இருந்து ஐஸ்கிரீம் தயாரித்து குழந்தைகளுக்கு தந்தால் இந்த கோடையில் அவர்களின் மனமும் உடலும் குளிரும். இளநீர் ஐஸ்கிரீம் செய்ய ரெடிதானே!

தேவையான பொருட்கள்:

இளநீர் – 1 கப்
இளநீர் வழு – 2 கப்
விப்பிங் க்ரீம் – 1 கப்
தேங்காய்ப்பால் – 1 கப்
தேங்காய் துருவல் – ¼ கப்
சுண்டிய பால் – 1 கப்.

செய்முறை:

இளநீர் மற்றும் இளநீர் வழுவுடன் தேங்காய்ப்பாலை சேர்த்து நைசாக அரைத்துக்கொள்ளவும். இது இதோடு விப்பிங் க்ரீம், சுண்டியபால், தேங்காய் துருவல் ஆகியவற்றை நன்கு கலக்கவும். பின்னர் இந்தக் கலவையை எடுத்து ஃபீரிசரில் வைக்கவும். குறைந்தது 4 மணிநேரம் ஃபீரிசரில் வைத்தால் இளநீர் ஐஸ்க்ரீம் தயாராகிவிடும். கூடுதல் சுவைக்காக கொரகொரப்பான பாதாம், முந்திரி, திராட்சை போன்ற உலர் பழங்களை சேர்த்து பரிமாறலாம்.

The post பெல்ஜியம் சாக்லேட்… சிக்மகளூர் காபி… appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...