×

சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த 15 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து பாராட்டினார் சங்கர் ஜிவால்

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், காவல் ஆளிநர்களை ஊக்குவிக்கும் வகையில், திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்து களவுப் பொருட்களை மீட்ட காவல் ஆளிநர்கள், குற்ற சம்பவங்களின்போது, விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கையும் களவுமாக கைது செய்யும் காவல் ஆளிநர்கள், ரோந்து வாகன காவல் குழுவினர்கள் மற்றும் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்யும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து அவர்களது பணியைப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வருகிறார்.

குமரன் நகர் பகுதியில் வேலை பார்த்த வீட்டில் தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற வேலைக்கார பெண் உட்பட 2 நபர்கள் கைது. 207 சவரன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.34,000/- பறிமுதல்

சென்னை, அசோக் நகர், 62வது குறுக்குத் தெருவில் வசித்து வரும் மதுரகவி, வ/85, த/பெ.கிருஷ்ணமூர்த்தி என்பவர் கடந்த 06.05.2023 அன்று மேற்படி அவரது வீட்டிலிருந்த தங்க நகைகளை சரிபார்த்த போது 207 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூ.50,000/- திருடு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து மதுரகவி, R-6 குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. R-6 குமரன் நகர் காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் A.மணிமாலா தலைமையில் உதவி ஆய்வாளர் J.ஜெயபாலாஜி, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் P.கோபிநாத், M.வேல்முருகன், முதல்நிலைக் காவலர்கள் R.நவீன்ராஜ் (மு.நி.கா.45026), K.செந்தில்குமார் (மு.நி.கா.37225), P.பாண்டியராஜன் (மு.நி.கா.52945) மற்றும் காவலர் G.பாரதி (கா.49193) ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு,

மேற்படி வீட்டில் திருடிய வேலைக்கார பெண்மணி தேவி, வ/32, த/பெ.மாணிக்கம், எண்.1/30, தோப்பு தெரு, எல்ராம்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஆண் நண்பர் ஜெகநாதன், வ/34, த/பெ.ராஜகோபால், எண்.90, தோப்பு தெரு, எல்ராம்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து புகார்தாரரின் வீட்டில் திருடப்பட்ட 207 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூ.34,000/- பறிமுதல் செய்யப்பட்டது.

கோயம்பேடு பகுதியில் 2 இலகுரக சரக்கு வாகனத்தில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் கடத்தி வந்த நபர் கைது. 855 கிலோ குட்கா பாக்கெட்டுகள் மற்றும் 2 இலகுரக சரக்கு வாகனங்கள் பறிமுதல்.

K-11 CMBT காவல் நிலைய உதவி ஆய்வாளர் G.கோபால் தலைமையில், தலைமைக் காவலர் M.கனகராஜ், முதல்நிலைக் காவலர்கள் S.செந்தில்குமார் (மு.நி.கா.44170), D.சதிஷ் (மு.நி.கா.51047) மற்றும் M.வெங்கடேஸ்வரன் (மு.நி.கா.41390) ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் கடந்த 08.05.2023 அன்று கோயம்பேடு, ரோகிணி திரையரங்கம் அருகே கண்காணித்து, இலகுரக சரக்கு வாகனத்தில் குட்கா புகையிலைப் பாக்கெட்டுகளை கடத்தி வந்த சுரேஷ், வ/32, த/பெ.தங்கப்பாண்டி, எண்.50/1, மண்ணடி தெரு, கோயம்பேடு, சென்னை என்பவரை கைது செய்தனர். மேலும் சுரேஷ் கொடுத்த தகவலின் பேரில் மேற்படி சுரேஷின் வீட்டிலும் சோதனை செய்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூல்லிப், விமல், எம்.டி.எம் உட்பட 855 கிலோ குட்கா புகையிலைப் பாக்கெட்டுகள், ரொக்கம் ரூ.50,000/- மற்றும் 2 இலகுரக சரக்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆட்டோ திருடிய 2 நபர்களை பிடித்த பூக்கடை காவல் நிலைய ரோந்து வாகன காவல் குழுவினர். ஆட்டோ பறிமுதல்.

சென்னை பெருநகர காவல், C-1 பூக்கடை காவல் நிலைய ரோந்து வாகன பொறுப்பு/சிறப்பு உதவி ஆய்வாளர் M.மதியழகன் மற்றும் காவல் வாகன ஓட்டுநர்/ ஆயுதப்படை காவலர் Y.மகேஷ் ஆகியோர் கடந்த 12.05.2023 அன்று இரவு ரோந்து பணியிலிருந்தபோது, நள்ளிரவு, பாரிமுனை ஈவ்னிங் பஜார் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக இருந்த ஆட்டோவில் அமர்ந்திருந்த 2 நபர்களை விசாரித்தபோது, இருவரும் மது போதையில் இருந்ததும், விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததன்பேரில், காவல் குழுவினர் மேற்படி ஆட்டோவின் பதிவு எண்ணை வைத்து அதன் உரிமையாளரின் செல்போன் எண்ணை கண்டுபிடித்து, உரிமையாளரை செல்போனில் தொடர்பு கொண்டபோது, ஆட்டோவின் உரிமையாளர் குமரன் நகர் பகுதியில் வசித்து வருவதாகவும்,

சில நாட்களுக்கு முன்பு வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த மேற்படி ஆட்டோ திருடு போனதாகவும், இது தொடர்பாக R-6 குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததின்பேரில், காவல் குழுவினர் மேற்படி ஆட்டோவை திருடிக் கொண்டு வந்த எதிரிகள் 1.ராஜ்குமார், வ/38, த/பெ.வேதகிரி, எல்.பி. ரோடு, அடையாறு, 2.சசிகுமார், வ/33, த/பெ.வீராசாமி, கெனால் பேங்க் ரோடு, கோட்டூர், சென்னை ஆகிய இருவரை பிடித்து, ஆட்டோவை பறிமுதல் செய்து, பூக்கடை காவல் நிலையத்தில் ஒப்படைத்து விசாரணைக்குப் பின்னர் R-6 குமரன் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மேற்படி சம்பவங்களில் சிறப்பாக பணிபுரிந்து, குற்றவாளிகளை கைது செய்த 15 காவல் அதிகாரிகள், ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இன்று நேரில் அழைத்து, வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

The post சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த 15 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து பாராட்டினார் சங்கர் ஜிவால் appeared first on Dinakaran.

Tags : Shankar Jiwal ,Chennai ,Metropolitan Guild Commissioner ,Sankar Jiwal ,
× RELATED கைப்பந்து போட்டியில் வெண்கல பதக்கம்...