×

தமிழ்நாட்டில் புகையிலை பொருட்களுக்கு எதிராக பல்வேறு இடங்களில் சோதனை: 58 வழக்குகள் பதிவு: 63 நபர்கள் கைது

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் குட்கா புகையிலை பொருட்களுக்கு எதிரான சோதனையில் 58 வழக்குகள் பதிவு செய்து, 63 நபர்கள் கைது செய்யப்பட்டு, 31.44 கிலோ குட்கா புகையிலை பொருட்கள், 246 சிகரெட்டுகள், பணம் ரூ.2,070 பறிமுதல் செய்துள்ளனர். லாட்டரி விற்பனைக்கு எதிரான ஒரு நாள் சிறப்பு சோதனையில் 9 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், அவர்கள் உத்தரவின்பேரில், கஞ்சா மற்றும் குட்கா பொருட்களை ஒழிக்கும் பொருட்டு, போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கை (Drive Against Drugs (DAD) மற்றும் புகையிலை பொருட்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கை (DABToP) ஆகிய சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், குட்கா புகையிலை பொருட்களுக்கு எதிராகவும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனைக்கு எதிராகவும், ஒரு நாள் சிறப்பு தணிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் மூலம் நேற்று (15.05.2023) புகையிலை பொருட்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கை (DABToP) மற்றும் லாட்டரி விற்பனைக்கு எதிரான ஒரு நாள் சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இச்சோதனையில், சென்னை பெருநகரில் உள்ள பள்ளி, கல்லூரி உட்பட கல்வி நிறுவனங்களுக்கு அருகில் மற்றும் இதர இடங்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதைனைகள் மேற்கொண்டு, குட்கா புகையிலை பொருட்கள் வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக 58 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 63 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 31 கிலோ 440 கிராம் குட்கா புகையிலை பாக்கெட்டுகள், 246 சிகரெட்டுகள் மற்றும் பணம் ரூ.2,070 பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரிகள் மற்றும் ஒரு நம்பர் லாட்டரி விற்பனைக்கு எதிரான சிறப்பு சோதனையில், 2022-ம் ஆண்டு முதல் 14.05.2023 வரையில் பதிவான 208 வழக்குகளில் 141 வழக்குகளுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று (15.05.2023) ஒரே நாளில் 9 லாட்டரி வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை பெருநகர காவல்துறையினர் மூலம் தொடர்ந்து பள்ளி, கல்லூரி உட்பட கல்வி நிறுவனங்களுக்கு அருகில் மற்றும் இதர இடங்களில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள், குட்கா, மாவா உள்ளிட்ட புகையிலை பொருட்களை கடத்தி வருபவர்கள், பதுக்கி வைப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மற்றும் லாட்டரி விற்பனை செய்பவர்களை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

The post தமிழ்நாட்டில் புகையிலை பொருட்களுக்கு எதிராக பல்வேறு இடங்களில் சோதனை: 58 வழக்குகள் பதிவு: 63 நபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Metropolitan ,Guild ,Commissioner ,Utdarawinbere ,Kudka Tobacco ,Gudka Tobacco ,Dinakaran ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...