×
Saravana Stores

திருச்சியில் அனுமதியின்றி இருசக்கர வாகனத்தில் ஆதரவாளர்கள் உடன் ஊர்வலம் சென்ற பிரபல பைக்கர் அசார் கெட்டவன் மீது வழக்குப்பதிவு..!!

திருச்சி: திருச்சியில் அனுமதியின்றி இருசக்கர வாகனத்தில் ஆதரவாளர்கள் உடன் ஊர்வலம் சென்று போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பிரபல பைக்கர் அசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் வெளியான வீடியோக்களின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். யூடியூப், இன்ஸ்ட்ராம் போன்ற சமூக ஊடகங்களில் வீடியோக்களை பதிவேற்றம் செய்து அதன் மூலம் பலர் பிரபலமாகி வருவதுடன் வருமானத்தையும் ஈட்டி வருகின்றனர். அந்த வகையில் திருச்சி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த பிசிஏ பட்டதாரியான முகமது அசாருதீன் என்பவர் அசார் கெட்டவன் என்ற பெயரில் யூடியூப், இன்ஸ்ட்ராம் போன்ற சமூக ஊடகங்களில் கணக்கு வைத்துள்ளார்.

அதில் இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டி, வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். தற்போது அவரை சமூக வலைதள பக்கங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகிறார்கள். சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பைக்கில் செல்லும் அசாரை பார்க்க, செல்லும் இடங்களில் எல்லாம் இளைஞர்கள் கூடுவதும் வழக்கம். இதனால் அந்த பகுதிகளில் கூட்டம் கூடி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதும் வழக்கம். தனது விலை உயர்ந்த பைக்கை எடுத்துக்கொண்டு ஊர் ஊராக சுற்றி அதை வீடியோ எடுத்து சமூக வலைதள பக்கங்களில் அசார் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் இரண்டு தினங்களுக்கு முன்பு திருச்சி எம்.ஜி.ஆர். சிலை அருகில் நீதிமன்ற சாலையில் தனது சப்ஸ்கிரைப்பர்களை சந்திக்க உள்ளேன் என்று பதிவிட்டிருந்தார். அதனை அடுத்து அவரை காண அங்கு நூற்றுக்கணக்கான இளைஞர்கள் குவிந்தனர். அங்கு சென்ற அசார், தனது சப்ஸ்கிரைப்பர்களான இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் புடைசூழ பின்தொடர பைக்கை அலறவிட்டபடி பயணத்தை தொடர்ந்தார். அசார் மற்றும் அவரது சப்ஸ்கிரைப்பர்களான இளைஞர்களின் பைக் பேரணியால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய நிலையில் அசாரை அழைத்து விசாரணை செய்த திருச்சி அமர்வு நீதிமன்ற போலீசார், அசார் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது, அனுமதி இல்லாமல் கூடி ஊர்வலம் செல்வது, பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தை இயக்குவது, மோட்டார் வாகன சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் அவருக்கு 11 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதேபோல் வேகமாக பைக் ஓட்டி சாகசம் செய்து அதை யூடியூபில் பதிவிட்ட கோவை சேர்ந்த வாசன் மீது இதுபோன்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. யூடியூப், இன்ஸ்ட்டாவில் லைக்குகளுக்காக இதுபோன்ற சாகசத்தில் இளைஞர்கள் ஈடுபடக்கூடாது என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

The post திருச்சியில் அனுமதியின்றி இருசக்கர வாகனத்தில் ஆதரவாளர்கள் உடன் ஊர்வலம் சென்ற பிரபல பைக்கர் அசார் கெட்டவன் மீது வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : azar ,trichy ,Azar Bad ,Dinakaran ,
× RELATED கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு...