×

விரிவாக்க பணியால் பெரும் சிரமம்; சாலை, தண்ணீர் வசதி கோரி மக்கள் மறியல்: நத்தம் அருகே பரபரப்பு

நத்தம்: நத்தம் அருகேயுள்ளது பரளிபுதூர் ஊராட்சிக்குட்பட்டது பொடுகம்பட்டி கிராமம். இப்பகுதியில் மதுரை- நத்தம் நான்கு வழிச்சாலை பணிக்காக நிலங்களை கையகப்படுத்தி, சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இப்பணியின் போது ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணறு மற்றும் சாலை கையகப்படுத்தப்பட்டது. பணிகள் முடிந்ததும் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் மற்ணும் சாலை வசதிகளை மேம்படுத்தி தருவதாக உறுதியளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை ஆழ்துளை கிணறுகள் மட்டும் அமைத்துள்ளனர்.

பைப் லைன் போட்டு தண்ணீர் விநியோகம் செய்யவில்லை. மேலும் சாலை வசதி செய்து தராமல் அப்படியே போட்டு விட்டனர். இதனால் பொடுகம்பட்டி கிராமத்திற்கு மக்கள் நடந்தும், வாகனத்திலும் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு கோரிக்கை வைத்தும், இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால் சாலை, தண்ணீர் வசதி கோரி பொடுகம்பட்டி கிராமத்தை சேர்ந்த 300க்கு மேற்பட்டோர் நேற்று காலை திடீரென டோல்கேட் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவலறிந்ததும் நத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து அனைவரும் மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

The post விரிவாக்க பணியால் பெரும் சிரமம்; சாலை, தண்ணீர் வசதி கோரி மக்கள் மறியல்: நத்தம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Natham ,Nattam ,Podukambatti ,Paraliputur ,Madurai- ,Dinakaran ,
× RELATED நத்தம் பகுதியில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு பணிகள் ஆய்வு