×

தேயிலைத் தோட்டங்களால் ஈர்க்கும் தென்னகத்து காஷ்மீர்… வெயிலுக்கு விடைகொடுங்க மூணாறுக்கு படையெடுங்க…

மூணாறு: மூணாறில் தற்போது கோடை சீசன் ஆரம்பித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. சுற்றுலா இடங்கள் அனைத்தும் கூட்டநெரிசலால் திணறுகின்றன.
தென்னகத்து காஷ்மீர் என அழைக்கப்படும் மூணாறில் தற்போது குளிர்ந்த காலநிலை நிலவுகிறது. நடுங்க வைக்கும் அளவிற்கு அதிகாலையில் 7 டிகிரி செல்சியஸ் தட்பவெப்பம் நிலவுகிறது. இதனால், இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் மூணாறுக்கு படையெடுத்து வருகின்றனர். காஷ்மீரை போன்றே மூணாறும் இயற்கைசூழ் நகரமாக திகழ்கிறது. மூணாறில் அதிகமாக நம் கண்களைக் கொள்ளைகொள்வது தேயிலைத் தோட்டங்கள்தான். அதனிடையே வளைந்து நெளிந்து செல்லும் மலைச்சாலைகளைக் காண்பதற்கு அற்புதமாக இருக்கும். ஜாலியாகச் சுற்றிப்பார்க்க மூணாறில் என்னென்ன இடங்கள் இருக்கின்றன என்பதை பார்க்கலாம்…

இரவிகுளம் தேசிய பூங்கா:
அழிந்துவரும் இனமான வரையாடுகளை பார்க்க வேண்டுமானால் மூணாறுக்கு அருகில் உள்ள இரவிகுளம் தேசிய பூங்காவுக்கு செல்ல வேண்டும். மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏறத்தாழ 97 சதுர கி.மீ. பரப்பளவில் இந்த பூங்கா அமைந்துள்ளது. பூங்காவில் உள்ள வரையாடுகளை காண சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் கடும் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கின்றனர். இதற்காகவே அனுமதிக்கப்பட்டுள்ள வாகனத்தில் மட்டும் தான் சுற்றுலாப் பயணிகள் சென்று வர வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் பூங்கவை சுற்றி பார்ப்பதற்கு வனத்துறையின் சார்பில் சிறப்பு வாகன வசதி செய்ப்பட்டுள்ளது.

ஆனைமுடி சிகரம்:
இரவிகுளம் தேசிய பூங்காவிற்கு உள்ளே அமைந்துள்ளது ஆனைமுடி சிகரம். தென்னிந்தியாவிலேயே உயரமான சிகரம் இது தான். 2,700 மீட்டர் உயரம் கொண்டது. மலையேற்றத்திற்கு சிறந்த இடமாகும், இங்கு அபூர்வ இன பிராணிகள், பாம்புகள், பட்டாம்பூச்சி மற்றும் மூலிகை செடிகள் உள்ளன. இரவிகுளத்தில் உள்ள வன மற்றும் வனவிலங்கு அதிகாரிகளின் சிறப்பு அனுமதி பெற்றால் மட்டுமே இந்த சிகரத்தில் ஏற முடியும். வனத்துறையின் பாதுகாப்பில் உள்ள வனப்பகுதி என்பதால் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீல குறிஞ்சி மற்றும் வன உயிரினங்கள் பல ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்றே கூறலாம்.

மாட்டுப்பெட்டி அணை:
மூணாறு நகரத்திலிருந்து 13 கிமீ தூரத்தில் உள்ளது மாட்டுப்பெட்டி அணைக்கட்டு. இது கடல் மட்டத்திலிருந்து 1,700 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அணைக்கட்டை சுற்றி பார்ப்பது மட்டுமின்றி அணைக்கட்டில் படகு சவாரியும் செய்ய்யலாம். மேலும், மாட்டுப்பெட்டியில் செயல்பட்டுவரும் இந்தோ-ஸ்விஸ் கால்நடை திட்டத்தினால் நடத்தப்படும் பால் பண்ணையும் புகழ்பெற்றது. அங்கு வெவ்வேறு உயர்ரக பசுக்கள் பராமரிக்கப்படுவதை காணலாம்.

குண்டளை அணை:
மூணாறில் இருந்து டாப் ஸ்டேஷன் செல்லும் சாலையில் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது குண்டளை அணைக்கட்டு. 1925ல் ‘ஆர்ச்’ வடிவில் கட்டப்பட்ட மிகவும் பழைமை வாய்ந்த அணையாகும். மின்வாரியத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த அணையின் நீர்மட்டம் 65 அடி. எந்த சீசனிலும் தண்ணீரின் அளவு குறையாமல் இருப்பது அணையின் சிறப்பு அம்சம். அணையை சுற்றி உள்ள மலைகளும், தேயிலை தோட்டங்களும், யானை உள்ளிட்ட வன விலங்குகளும் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்கிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக பல தரத்தில் உள்ள படகுகள் இயக்கப்படுகின்றன. மேலும், குதிரை சவாரி உட்பட ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் இங்கு உள்ளன.

குண்டளை எக்கோ பாயிண்ட்:
இந்த இடம் மூணாறிலிருந்து 13 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த இடம் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமாக விளங்குகிறது. இது டாப் ஸ்டேஷன் சாலையில், மாட்டுப்பெட்டி அணையிலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள நீர்த்தேக்க செயற்கை ஏரியாகும். மாட்டுப்பெட்டியில் இருந்து எக்கோ பாயிண்ட் வரை பயணிப்பது என்பது இயற்கை எழில் கொஞ்சும் ஒரு அனுபவம் ஆகும். சாலையின் அருகே யானைகளை பார்ப்பது அசாதாரணமானது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக மாவட்ட சுற்றுலாத்துறை பல தரத்தில் உள்ள படகுகளை இயக்குகின்றது.

டாப் ஸ்டேஷன்:
மூணாறில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தமிழக – கேரள எல்லைப்பகுதியான இது தமிழக வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கிருந்து தமிழ்நாட்டின் தேனி, பெரியகுளம் மாவட்டங்களின் தொலை தூர காட்சிகளை காணலாம். மலை முகடுகளை தொட்டு தழுவும் மேகக்கூட்டங்களுக்கிடையே சூரிய உதயத்தை காணலாம் என்பது இந்த இடத்தின் சிறப்பு. மலைகளுக்கிடையே உள்ள புல்வெளிகளில் நடந்து சென்று இயற்கையின் தாழ்வாரங்களை காண்பது என்பது ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். மலையேற்றத்தை விரும்புவர்களுக்கு இது ஏற்ற இடமாகும்.

The post தேயிலைத் தோட்டங்களால் ஈர்க்கும் தென்னகத்து காஷ்மீர்… வெயிலுக்கு விடைகொடுங்க மூணாறுக்கு படையெடுங்க… appeared first on Dinakaran.

Tags : South East Kashmir ,Moonair ,Moonaru ,Moonadar ,
× RELATED சின்னாறு பகுதியில் குட்டியுடன் உலா வரும் காட்டு யானை