×

தக்காளி, கத்திரி, வெண்டை காய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டமானது, தக்காளி, கத்திரி மற்றும் வெண்டை ஆகிய காய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு தக்காளி, கத்திரிக்காய் மற்றும் வெண்டைக்காய் உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் முக்கிய இடம் வகிக்கின்றது.

தக்காளி

வேளாண் மற்றும் விவசாய நல அமைச்சகத்தின் மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீட்டின்படி (2021-22), தமிழகத்தில் தக்காளி சுமார் 0.54 லட்சம் எக்டர் பரப்பில் பயிரிடப்பட்டு 16.18 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தர்மபுரி,கிருஷ்ணகிரி, சேலம், திண்டுக்கல், திருப்பூர், கோவை, தேனி, நாமக்கல் மற்றும் திருவண்ணாமலை ஆகியவை தக்காளி உற்பத்தி செய்யும் முக்கிய மாவட்டங்களாகும். தற்போது கோவை மொத்தவிலை சந்தைக்கு தக்காளி ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி, கோவை சுற்றுவட்டார கிராமங்களான பெரியநாயக்கன்பாளையம் கிணத்துக் கடவு, மாதம்பட்டி, தொண்டாமுத்தூர், நாச்சிபாளையம், சாவடி, உடுமலைபேட்டை, தாராபுரம் மற்றும் கர்நாடக மாநிலம் மைசூர் பகுதிகளிலிருந்து வருகின்றது.

கத்திரி

வேளாண்மை மற்றும் விவசாய நல அமைச்சகத்தின் மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீட்டின்படி (2021-22), கத்திரி 0.24 லட்சம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 3.13 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படுவதாக அறியப்படுகிறது. தமிழகத்தில், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், நாமக்கல், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் கத்திரி அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றது. வர்த்தக மூலங்களின்படி, தற்போதைய வரத்து மாதம்பட்டி, ஆலந்துறை, நாச்சிப்பாளையம், குப்பனூர், தொண்டாமுத்தூர் மற்றும் பூலுவப்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து வருகின்றது.

வெண்டை

வேளாண்மை மற்றும் விவசாய நல அமைச்சகத்தின் மூன்றாவது முன்கூட்டியமதிப்பீட்டின்படி (2021-22), வெண்டை 0.25 லட்சம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 24 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படுவதாக அறியப்படுகிறது. தமிழகத்தில் தர்மபுரி, சேலம் ஈரோடு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், கோவை, மதுரை, வேலூர், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் வெண்டை அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றது. வர்த்தக மூலங்களின்படி, தற்போது, கோவை

சந்தைக்கு வெண்டை வரத்தானது மாதம்பட்டி, ஆலந்துறை, நாச்சிப்பாளையம், குப்பனூர், தொண்டாமுத்தூர் மற்றும் பூலுவப்பட்டி பகுதிகளிலிருந்து வருகின்றது.விலை முன்னறிவிப்பு திட்டக்குழு ஒட்டன்சத்திரம் மற்றும் கோவை சந்தையில் கடந்த 12 ஆண்டுகளாக நிலவிய தக்காளி, கத்திரி மற்றும் வெண்டை விலையில் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது. பொருளாதார ஆய்வு முடிவின்படி, அறுவடையின் போது (மே 2023) தரமான தக்காளியின் பண்ணைவிலை கிலோவிற்கு ரூ 24முதல் 27 வரை, நல்ல தரமான கத்திரியின் விலை ரூ 22 முதல் 27 ஆகவும் மற்றும் தரமான வெண்டையின் விலை ரூ 26 முதல் 28 வரை இருக்கும் என்று அறியப்படுகிறது. மேலும், கோடை காலம் என்பதால் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே விவசாயிகள் அதற் கேற்ப சந்தை முடிவு எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

The post தக்காளி, கத்திரி, வெண்டை காய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Nadu Irrigation Agricultural ,Programme ,Centre for Agricultural and Rurality Development Research ,University of Tamil Nadu Agricultural Development ,
× RELATED கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில்...