×

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி தீக்குளிக்க முயற்சி: போலீசார் காப்பாற்றினர்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த வெங்கத்தூர் கிராமத்தைசேர்ந்தவர் சுடர்மணி. இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில் ஒரு மகன் நவீன்குமார், ஐடிஐ முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றார். கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு வலசை வெட்டிக்காடு கிராமத்தில் அடி, தடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் வெங்கத்தூரை சேர்ந்த சிலர் அந்த பிரச்னையில் நவீன்குமாரின் பெயரையும் சேர்த்துவிட்டதாக தெரிகிறது. இதையடுத்து அந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கவேண்டும் என்று கூறி, நவீன்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி முன் ஜாமீன் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், விசாரணைக்காக அழைத்து செல்கிறோம் என்று அடிக்கடி நவீன்குமாரை போலீசார் அழைத்துச்சென்றதாக தெரிகிறது. இதனிடையே விசாரணை என்ற பெயரில் வீட்டில் நின்றிருந்த இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். இதையடுத்து நவீன்குமாரின் பெற்றோர் சென்று கேட்டபோது, ‘’உங்கள் மகன் மீது 110 வழக்கு போட்ட பிறகுதான் திருப்பி தருவோம்’ என்று கூறியுள்ளனர். இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு சுடர்மணி, செல்வி வந்துள்ளனர்.

திடீரென அவர்கள் தாங்கள் கொண்டுவந்திருந்த மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். அங்கு பணியில் இருந்த போலீசார் அவர்களை காப்பாற்றி விசாரணை நடத்தினர். அப்போது தம்பதி, ‘’தனது மகன் மீது போலீசார் பொய்யான வழக்குகளை போடுகின்றனர். மகன் எந்த தவறும் செய்யவில்லை. தவறு செய்தால் வழக்குகளை போடுங்கள். இன்னும் திருமணம் ஆகாமல் இருப்பதால் இதுபோன்ற வழக்குகளால் அவனுடைய வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிடும்’ என்றனர். இதையடுத்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துவிட்டு மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் காரணமாக திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.

The post திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி தீக்குளிக்க முயற்சி: போலீசார் காப்பாற்றினர் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur Collector ,Tiruvallur ,Sudarmani ,Venkathur ,
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தலில்...