×

குப்பை, இறைச்சி கழிவுகளால் மாசுபடும் திருத்தணி நந்தியாறு: பாதுகாக்க பொது மக்கள் வலியுறுத்தல்

திருத்தணி: திருத்தணியில் உள்ள நந்தியாறு ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வழியாக எஸ்.அக்ராகரம், அகூர், தரணிவராக புரம், திருத்தணி நகரம், பட்டாபிராமபுரம் கிராமத்தை தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கீழாந்தூர் பள்ளியாங்குப்பம், கிருஷ்ணாபுரம் வழியாக நாபலூர், ராமாபுரம் இடையே கொசஸ்தலை ஆற்றில் கலந்து இதன்பின்னர் அங்கிருந்து பூண்டி ஏரி வழியாக கடலில் கலக்கிறது. திருத்தணி கோட்ட ஆறுமுகசாமி கோயில், வீராட்டீஸ்வரர் கோயிலுக்கு இடையில் செல்லும் நந்தியாற்றின் பகுதி பள்ளமாக இருப்பதால் தண்ணீர் தேங்கி மாசடைந்துள்ளது.

இதன்காரணமாக மேற்கண்ட கோயிலுக்கு வரும் பக்தர்கள், திருத்தணி அரசு பொது மருத்துவமனை அரசு, மகளிர் மேல்நிலைப்பள்ளி, தனியார் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் நந்தியாற்றில் இருந்து வெளியேறும் கழிவுகளால் கடும் துர்நாற்றம் ஏற்பட்டு மக்கள் கடும் சிரமப்படுகின்றனர். மேலும் ஆற்றின் நடுவே குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளது. இதனால் தண்ணீர் செல்வது தடைப்பட்டு கழிவுகள் தேங்கி நிற்கிறது.

இருள்சூழ்ந்த பாலங்கள்
“திருத்தணி நந்தியாறு, திருத்தணி, திருப்பதி மற்றும் திருத்தணி, சென்னை சாலை, கோட்டை ஆறுமுகசாமி கோயில் பாலம், திருத்தணி- அரக்கோணம் சாலை செல்லும் பகுதி என 4 பாலங்கள் உள்ளன. இந்த பாலங்கள் மீது விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரத்தில் அந்த பகுதியில் செல்வதற்கு பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் ஆடு, மாடு, கோழி இறைச்சி கழிவுகளை பாலங்கள் மீது கொட்டிவிட்டு சென்றுவிடுகின்றனர்.

இதனால் பொதுமக்கள் செல்லும்போது கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, பாலத்தின் மீது கழிவுகள் கொட்டுவதை தடுக்கவேண்டும். பாலத்தின் இரண்டு பக்கங்களிலும் வேலி அமைக்க வேண்டும், கோட்டை ஆறுமுகசாமி கோயில் வழியாக ஆற்றில் குப்பை, இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்’ என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர், சுற்றுச்சூழல் அலுவலர்கள், மாசு கட்டுப்பாட்டு வாரியம், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு மக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

The post குப்பை, இறைச்சி கழிவுகளால் மாசுபடும் திருத்தணி நந்தியாறு: பாதுகாக்க பொது மக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tiruthani ,Nandiyaru Ranipet District ,Thiruthani ,Solingar Agragaram ,Akur ,Tiranivaranga Puram ,Thiruthani City ,Pattabramapuram ,
× RELATED திருத்தணி அருகே பாரம்பரிய நெற்பயிர்...