×

மோடி அரசின் 9 ஆண்டுகால ஆட்சி நிறைவையொட்டி, மே 28ம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு!!

புதுடெல்லி: நாடாளுமன்ற புதிய கட்டிடம் வருகிற 28-ந்தேதி திறக்கப்படும் என ஒன்றிய அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ், டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இருந்து இந்தியா கேட் வரையிலான 3 கிமீ ராஜபாதையை சீரமைத்தல், புதிய நாடாளுமன்றம், புதிய பிரதமர் இல்லம், அலுவலகம் உள்ளிட்ட கட்டிடங்கள் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகின்றன. இதில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் மோடி கடந்த 2020ல் அடிக்கல் நாட்டினார்.

இதன் பணிகள் கடந்த ஆண்டு நவம்பரில் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் பணிகள் தாமதமடைந்த நிலையில், தற்போது புதிய நாடாளுமன்ற கட்டிட பணிகள் இறுதி கட்டத்தை எட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. நாடாளுமன்ற கட்டிட உட்புறத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடப்பதாகவும் இம்மாத இறுதிக்குள் கட்டிடம் தயாராகி விடும் என்றும் அதிகாரிகள் கூறி உள்ளனர். எனவே புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழா 28-ந்தேதி நடைபெறும் அரசு வட்டாரங்கள் இன்று தெரிவித்தன.

நாடாளுமன்ற புதிய கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இந்த புதிய கட்டிடத்தில், இந்தியாவின் ஜனநாயக பெருமையை பறைசாற்றும் பிரமாண்டமான அரசியல் சட்ட மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், எம்.பி.க்கள் ஓய்வு எடுக்கும் அறை, நூலகம், நிலைக்குழுக்களுக்கான அறைகள், உணவு அருந்தும் பகுதி, விசாலமான வாகன நிறுத்தும் பகுதி ஆகியவை இடம்பெற்றுள்ளதாக ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2014ம் ஆண்டு மே 26ம் தேதி மோடி முதன்முறையாக பிரதமராக பதவி ஏற்றார். ஆகவே 9 ஆண்டு கால ஆட்சியின் முக்கிய நிகழ்வாக புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட உள்ளது.

The post மோடி அரசின் 9 ஆண்டுகால ஆட்சி நிறைவையொட்டி, மே 28ம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு!! appeared first on Dinakaran.

Tags : Modi government ,New Delhi ,Union government ,Central Vista ,
× RELATED மோடி அரசுக்கு எதிராக முழு அர்ப்பணிப்புடன் போராடுவோம்: ராகுல் வேண்டுகோள்