×

சினிமா தயாரிப்பு நிறுவனம் ‘லைகா’வுக்கு சொந்தமான 8 இடங்களில் சோதனை: பல கோடி ரூபாய் முதலீட்டு ஆவணங்கள் சிக்கியதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: சட்டவிரோதமாக வெளிநாடுகளில் முதலீடு செய்த விவகாரத்தில் பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனம் லைகாவுக்கு சொந்தமான 8 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் வெளிநாடுகளில் பல கோடி ரூபாய் முதலீடு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இங்கிலாந்து தலைநகரம் லண்டனை தலைமையகமாக கொண்டு லைகா சினிமா தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. பிரபல தொழிலதிபர் சுபாஷ்கரன் என்பவருக்கு சொந்தமான நிறுவனமான லைகா, ரூ.100 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் உள்ள திரைப்படங்களை தான் எடுத்து வருகிறது. அதேநேரம், லைகா தயாரிக்கும் சினிமா வெளிநாடுகளிலும் திரையிடப்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்திற்கு முதன்மை செயல் நிர்வாக அதிகாரியாக பாமக சட்டமன்ற தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரன் உள்ளார். தமிழகத்தில் முன்னணி சினிமா தயாரிப்பு நிறுவனமாக ‘லைகா’ தற்போது இருந்து வருகிறது. குறிப்பாக தற்போது வெளியான ‘பொன்னியின் செல்வன்’ இரண்டு பாகங்களையும் இந்த நிறுவனம் தான் தயாரித்துள்ளது. இரண்டாவது பாகம் ரூ.300 கோடி வரை வருவாய் ஈட்டியுள்ளதாக லைகா நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதோடு இல்லாமல் நடிகர் கமல்ஹசான் நடிப்பில் ‘இந்தியன்-2’ திரைப்படம் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு வருமானத்தை குறைத்து கணக்கு காட்டியதாக லைகா நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் பல கோடி ரூபாய் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக கொண்டு சென்றதாகவும், வெளிநாடுகளில் முதலீடு செய்ததாகவும் சில ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. அதைதொடர்ந்து சட்டவிரோத பணம் பரிமாற்றம் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை தனது விசாரணையை தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக ‘லைகா’ நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை தி.நகர் விஜயராகவா சாலையில் உள்ள அலுவலகம், அடையாரில் உள்ள அலுவலகம், சென்னை அடுத்த காரம்பாக்கத்தில் உள்ள அலுவலகம் என 8 இடங்களில் இன்று அதிகாலை முதல் அமலாக்கத்துறை அதகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின் போது, லைகா நிறுவனத்தில் இருந்து ஊழியர்கள் யாரையும் வெளியே விடவில்லை.

அதேபோல் வெளியில் இருந்து வந்த யாரையும் அலுவலகத்திற்குள் விடவில்லை. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு உடன் இந்த சோதனை நடந்து வருகிறது. காலை 11 மணி வரை உள்ள நிலவரப்படி லைகா நிறுவனம் முறையாக கணக்குகள் காட்டாமல் பல கோடி ரூபாய் திரைப்பட நிகழ்ச்சிக்கான செலவுகள் என்ற பெயரில் சட்டவிரோதமாக கொண்டு சென்றதற்கான ஆவணங்கள். நடிகர், நடிகைகளுக்கு பல கோடி ரூபாய் ஊதியம் முறையான கணக்குகள் இல்லாமல் ரொக்கமாக வழங்கியதற்கான ஆவணங்கள் பல சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதேநேரம் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் படி லைகா செயல் நிர்வாக அதிகாரியாக உள்ள தமிழ்குமரனிடம் வரவு செலவுகள் குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்திற்கு சொந்தமான 8 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வரும் சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post சினிமா தயாரிப்பு நிறுவனம் ‘லைகா’வுக்கு சொந்தமான 8 இடங்களில் சோதனை: பல கோடி ரூபாய் முதலீட்டு ஆவணங்கள் சிக்கியதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Leica ,Chennai ,Laika ,Dinakaran ,
× RELATED லைகா, நடிகர் விஷால் இடையே நடந்த...