×

வேட்பு மனுவில் பொய் தகவல் தெரிவித்ததாக வழக்கு : எடப்பாடி பழனிசாமிக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முடிவு

சேலம்: வேட்புமனுவில் சொத்து பட்டியல் குறித்து பொய்யான தகவலை தெரிவித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டியை சேர்ந்த மிலானி என்பவர் சேலம் 1வது நீதித்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், கடந்த சட்டமன்ற தேர்தலின்போது எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி போட்டியிட்டபோது, வேட்பு மனு தாக்கலின் போது பொய்யான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார். அவரது அசையும் அசையாத சொத்துகள், தொழில் வருமானத்திற்கான ஆவணங்களில் பொய்யான தகவல்களை கூறியிருப்பதாகவும் அவர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் கூறியிருந்தார்.

இதுதொடர்பாக சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் சொத்து விவரங்கள், வருமான வரி கட்டியதற்கான ஆதாரங்கள், அவரது மனைவி வருமான வரி கட்டியதற்கான ஆதாரங்கள் உள்ளிட்டவைகளை போலீசார் திரட்டி வருகின்றனர். அதே நேரத்தில் புகார்தாரரான மிலானியை போலீசார் முதற்கட்டமாக விசாரித்துள்ளனர். மீண்டும் அவருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வரும் 26ம் தேதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘‘புகாருக்கான ஆவணங்களை திரட்டி வருகிறோம். இதில் புகார் தாரருக்கும் (மிலானி) குற்றம் சாட்டப்பட்டவருக்கும் (எடப்பாடி பழனிசாமி) சம்மன் அனுப்பி தனித்தனியாக விசாரணை நடத்துவோம்,’’ என்றார்.

The post வேட்பு மனுவில் பொய் தகவல் தெரிவித்ததாக வழக்கு : எடப்பாடி பழனிசாமிக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முடிவு appeared first on Dinakaran.

Tags : Central Crime Branch Police ,Edappadi Palaniswami ,Salem ,
× RELATED ஓமலூரில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை..!!