×

உடல் உபாதைகளுக்கு இயற்கை மூலிகை பொருட்கள் பழநியில் விற்பனை அமோகம்

 

பழநி: பழநி கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் உடல் உபாதைகளை தடுக்கும் இயற்கை மூலிகை பொருட்கள் விற்பனை அதிகளவில் நடக்கிறது. பழநி கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் விற்பனை செய்வதற்காக அடிவார பகுதிகளில் ஏராளமான அளவில் பொம்மை கடைகள், துணிக்கடைகள், விளையாட்டு பொருள் கடைகள் போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் குஜராத், ராஜஸ்தான் போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் வந்து தங்கி பழநி நகரில் மத்தளம், பிளாஸ் ஆப் பாரீஸ் மாவில் உருவாக்கப்பட்ட பொம்மைகள் மற்றும் மூங்கிலால் தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.அதுபோல் பக்தர்களிடம் இயற்றை மூலிகை பொருட்களை விற்பனை செய்பவர்களும் அதிகளவில் குவிந்துள்ளனர். இவர்கள் வெட்டிவேர், சம்பங்கி விதை, வெந்தையம், சித்தகத்தி, ஆவாரம்பூ, வேம்பாளம்பட்டை, வலம்புரிக்காய், இடம்புரிக்காய், சாம்பிராணி கட்டை, ஜவ்வாது கட்டை, மலை நெல்லிக்காய், துளசி, மகிழம்பூ, கரிசலாங்கண்ணி, செம்பருத்திப்பூ போன்றவற்றை சேகரித்து வைத்து, பாட்டில்களில் அடைத்து வைத்து விற்பனை செய்கின்றனர்.

பாட்டில் ஒன்று அதன் அளவுகளை பொறுத்து ரூ.20ல் துவங்கி ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகின்றன.இதுகுறித்து பெத்தநாயக்கன்பட்டியை சேர்ந்த குட்டி என்பவர் கூறியதாவது: நாங்கள் விற்பனை செய்வது அனைத்தும் இயற்கை பொருட்கள்தான். இவற்றில் எதுவும் உணவு வகைகள் கிடையாது. உடலில் பூசிக்கொள்வதுதான். இவற்றை பயன்படுத்தினால் கண் எரிச்சல், தலைவலி, முடி உதிர்வு, முடி நிறம் மாறுதல், உடல் சூடு போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாது. தற்போது பெரும்பாலானவர்கள் டிவி பார்ப்பது, கணிப்பொறியை பயன்படுத்துவது போன்றவற்றால் உடல் சூடு, கண் எரிச்சல் பாதிப்புகளுக்கு உள்ளாகி உள்ளனர். இயற்கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு பயன்படுத்துவதால் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இவ்வாறு கூறினார்.

 

The post உடல் உபாதைகளுக்கு இயற்கை மூலிகை பொருட்கள் பழநியில் விற்பனை அமோகம் appeared first on Dinakaran.

Tags : Palani ,
× RELATED வயல்வெளி பள்ளியின் நன்மை வேளாண் துறை அட்வைஸ்