×

கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆம்னி பேருந்து முனையத்தை கிளாம்பாக்கத்திற்கு மாற்ற முடிவு: அமைச்சர் நேரில் ஆய்வு

சென்னை, மே 16: சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தை கிளாம்பாக்கம் அருகே மாற்றுவது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தற்போது அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், இப்பிரச்னைக்கு தீர்வாக, கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு பதிலாக கிளாம்பாக்கத்தில் புதிதாக கட்டுப்பட்டு வரும் பேருந்து நிலையத்தில் இருந்து, தென் மாவட்டங்களுக்கு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையம் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது.

இந்நிலையில், கோயம்பேடு பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் அங்குள்ள ஆம்னி பஸ் நிலையத்தை கிளாம்பாக்கத்தில் இருந்து 7 கி.மீ தொலைவில் வரதராஜபுரத்தில் உள்ள ரிங் ரோடு பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பான இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும் என்றும், ஆம்னி பஸ் நிலையத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய, நகரமைப்பு நிபுணர்கள் குழு 5 ஏக்கர் இடத்தை ஆய்வு செய்யும் என்றும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். 100க்கும் மேற்பட்ட பேருந்துகளுக்கு இடம் கிடைக்கும் என்றும், பயணிகள் தனியார் பஸ்களில் கிளாம்பாக்கத்தில் ஏற அனுமதிக்கப்படுவார்கள். இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால், சென்னை நகரில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும், என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இது தொடர் பாக அமைச்சர் சேகர்பாபு நேற்று நேரில் ஆய்வு செய்தார். இதுகுறித்து, சிஎம்டிஏ உயரதிகாரிகள் கூறுகையில், ‘‘கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்தில் இருந்து, 7 கி.மீ. தொலைவில் உள்ள வரதாஜபுரத்தில் ஆம்னி பேருந்து முனையத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து வருகிற 18ம் தேதி ஆய்வு செய்ய திட்டமிட்டு உள்ளோம்’’ என்றனர். இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், ‘‘கோயம்பேட்டில் நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனால், அரசு மற்றும் ஆம்னி பேருந்து நிலையம், கோயம்பேடு மார்க்கெட் ஆகிய பகுதிகளில் தினமும் பொதுமக்கள் பெரும் இடையூறுகளை சந்தித்து வருகின்றனர்.

இதனால் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பேருந்து நிலையத்தை கிளாம்பாக்கம் அருகே மாற்ற சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உயரதிகாரிகள் முடிவு செய்துள்ளது வரவேற்கதக்கது. கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்து நிலையத்தை கிளாம்பாக்கத்துக்கு மாற்றுவதால் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள பகுதியில் இருந்து ரிங்ரோடு பகுதிக்கு செல்வதற்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்த பகுதிகளில் வசிப்பவர்களுக்கு சுங்க கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். மேலும், வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காவல் நிலையம் அமைக்க வேண்டும். கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். மேலும், வரதராஜபுரத்தில் இருந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையம் மற்றும் தாம்பரத்திற்கு மினி பஸ் சேவைகளை ஏற்படுத்த வேண்டும்,’’ என்றனர்.

 

மாற்று வழித்தடங்கள் தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை

கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடியில் அமைக்கப்பட்டு வரும் புதிய புறநகர் பேருந்து முனையத்திலிருந்து, ஜி.எஸ்.டி. சாலை வழியாக போக்குவரத்து நெரிசலின்றி பேருந்துகளை இயக்குவது தொடர்பாகவும், தென் மாவட்ட பேருந்துகள் செல்ல மாற்று வழித்தடங்கள் அமைப்பது தொடர்பாகவும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவரும், அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு தலைமையில் காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்துத் துறையுடன் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், சென்னை வெளிவட்ட சாலை, வரதராஜபுரத்தில் தனியார் ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கான இடத்தை நேரில் சென்று அமைச்சர் ஆய்வு செய்தார். வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் அபூர்வா, தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், சென்னை பெருநகர வளர்ச்சி‌க் குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, போக்குவரத்து ஆணையர் நிர்மல்ராஜ், காவல்துறை, வருவாய்துறை, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

 

கூடுவாஞ்சேரியில் ரவுண்டானா

ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக கூடுவாஞ்சேரியில் ரவுண்டானா அமைப்பது தொடர்பாகவும், கூடுவாஞ்சேரி, மாடம்பாக்கம் சாலை முதல் மண்ணிவாக்கம் வரை 7 கி.மீ நீளத்திற்கும், கண்டிகை முதல் கூடுவாஞ்சேரி வரை 18 கி.மீ நீளத்திற்கும், நல்லம்பாக்கம் முதல் ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலை வரை 10 கி.மீ நீளத்திற்கும் சாலைகளை அகலப்படுத்துவது தொடர்பாகவும் அமைச்சர் தலைமையில் ஆலோசிக்கப்பட்டது.

ஜூன் மாதம் திறப்பு
கிளாம்பாக்கம் புதிய புறநகர் பேருந்து முனையம் “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்” எனும் பெயரில் மக்கள் பயன்பாட்டிற்காக வருகிற ஜூன் மாதம் திறந்து வைக்கப்படும். இந்த முனையத்திலிருந்து ஜி.எஸ்.டி. சாலை வழியாக போக்குவரத்து நெரிசலின்றி பேருந்துகளை இயக்குவது தொடர்பாகவும், தென் மாவட்ட பேருந்துகள் செல்ல மாற்று வழித்தடங்கள் அமைப்பது தொடர்பாகவும் தாம்பரம் மாநகர காவல் ஆணையருடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

The post கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆம்னி பேருந்து முனையத்தை கிளாம்பாக்கத்திற்கு மாற்ற முடிவு: அமைச்சர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Omni Bus Terminal ,Glampach ,Coimbatore ,Chennai ,Koyambedu ,bus ,Chennai… ,Dinakaran ,
× RELATED யூடியூபர் சங்கருக்கு மருத்துவ பரிசோதனை