×

(தி.மலை) விவசாயி தீக்குளிக்க முயற்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதால் விரக்தி

திருவண்ணாமலை, மே 16: வங்கிக்கடன் பெற்றுத்தருவதாக நாடகமாடி நிலத்தை அபகரிக்க முயற்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடந்தது. அதில், கூடுதல் கலெக்டர் வீர்பிரதாப்சிங், உதவி கலெக்டர் (பயிற்சி) ரஷ்மிராணி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் குமரன் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், இலவச வீட்டுமனைப் பட்டா, அரசு நலத்திட்டங்கள், சுயதொழில் கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக 412 பேர் மனுக்களை அளித்தனர். மேலும், மாற்றுத்திறனாளிகள் உதவி உபகரணங்கள் கேட்டு மனு அளித்தனர்.

பொதுமக்களின் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு, கலெக்டர் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, கடந்த வாரங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்து துறைவாரியாக ஆய்வு செய்தார். இந்நிலையில், கலபாக்கம் தாலுகா சின்னகல்லக்கந்தல் கிராமத்தை சேர்ந்த விவசாயி பழனி(52) என்பவர், கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் திடீரென மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே, அங்கிருந்த போலீசார் விரைந்து வந்து தடுத்து நிறுத்தி காப்பாற்றினர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், பழனிக்கு சொந்தமான நிலத்தை அடமானம் வைத்து வங்கியில் கடன் பெற்றுத்தருவதாக கூறி, அதே பகுதியை சேர்ந்த சிலர் மோசடியான ஆவணத்தை தயாரித்து, நிலத்தை அபகரிப்பதாகவும், அதை தடுத்து நிறுத்தக்கோரி தீக்குளிக்க முயன்றதாகவும் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, அவரை திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்ற போலீசார், அவர் மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப்பதிவு செய்து, சொந்த ஜாமீனில் விடுவித்தனர். மேலும், இது தொடர்பாக, நில அபகரிப்பு மோசடி பிரிவில் புகார் அளிக்குமாறு ஆலோசனை தெரிவித்தனர். மேலும், தண்டராம்பட்டு பகுதியை சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர், பழங்குடியினர் குருமன்ஸ் சாதிச்சான்று வழங்குமாறு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதேபோல், விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு வழங்கும் ஆண்டுக்கு ₹6 ஆயிரம் நிதியை, ₹12 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கட்சி சார்பற்ற விவசாய சங்கம் சார்பில் நூதன போராட்டம் நடத்தினர். அப்போது, பலூனை ஊதி பறக்கவிட்டு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர்.

The post (தி.மலை) விவசாயி தீக்குளிக்க முயற்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதால் விரக்தி appeared first on Dinakaran.

Tags : Th. Malai ,Thiruvannamalai ,Natakamadi ,
× RELATED 1300 மெட்ரிக் டன் உரம் கொள்முதல் * ரயில்...