×

ஐ.ஐ.ஐ.டி.-நார்வே அக்டர் பல்கலைக்கழகம் கல்வி, ஆராய்ச்சியில் மாணவர்கள் பரிமாற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை: ஐ.ஐ.ஐ.டி. நிறுவனம் கல்வி, ஆராய்ச்சியில் மாணவர் பரிமாற்ற திட்டத்திற்காக நார்வே நாட்டின் அக்டர் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. சென்னை அருகே மேலக்கோட்டையூரில் ஒன்றிய அரசு கல்வி நிறுவனமான இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம் (ஐஐஐடிடிஎம்) செயல்பட்டு வருகிறது. இதன் சார்பில் கல்வி மற்றும் ஆராய்ச்சி சேவைகளை இரு தரப்பும் பரிமாறிக் கொள்ளும் வகையில் நார்வே நாட்டின் அக்டர் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் அக்டர் பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் அறிவியல் துறையின் இயக்குனர் ஜோரன் மோனோ ஸ்கொப்டெலன் கிஸ்லேபோஸ் மற்றும் இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனத்தின் (ஐஐஐடிடிஎம்) இயக்குனர் கார்த்திகேயன் ஆகியோர் கையெழுத்திட்டு ஒப்பந்தங்களை பரிமாறிக் கொண்டனர். இந்த ஒப்பந்தத்தின் மூலம் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் மெகாட்ரானிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நடத்தப்படும் ஆராய்ச்சிகளுக்கு ஆசிரியர்களை பரிமாற்றம் செய்ய முடியும்.

இதுமட்டுமின்றி இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவன (ஐஐஐடிடிஎம்) மாணவர்கள் 12 மாதங்களுக்கு நார்வேயின் அக்டர் பல்கலைக்கழகத்தில் தங்கள் படிப்பை தொடரலாம். இதன் மூலம் மாணவர்களின் ஆராய்ச்சித்திறன் மேம்படும். நிகழ்வின்போது, அக்டர் பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் அறிவியல் துறையின் இயக்குனர் ஜோரன் மோனோ ஸ்கொப்டெலன் கிஸ்லேபோஸ் பேசுகையில்,”இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ், வயர்லஸ் கம்யூனிகேஷன்ஸ், மெகாட்ரானிக்ஸ் ஆகிய துறைகளுக்கு அக்டர் பல்கலைக்கழகம் முன்னுரிமை அளித்து வருகிறது. அந்தந்த பிரிவு ஆராய்ச்சிகளுக்கு இந்தியாவின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தங்களை அணுகுகிறது.

இதன்மூலம் இந்திய மாணவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னேற்றம் ஏற்படும். இந்த பரிமாற்றத் திட்டத்தின் கீழ் சேரும் மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் முற்றிலும், தள்ளுபடி செய்யப்படும்’’ எனக் கூறினார். இதை தொடர்ந்து, இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனத்தின் (ஐஐஐடிடிஎம்) இயக்குனர் கார்த்திகேயன் கூறுகையில்,”இந்த ஒப்பந்தம் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இதுபோன்ற சர்வதேச ஒப்பந்தங்களின் மூலம் இந்திய மாணவர்களின் திறமைகள் உலகம் முழுவதும் சென்றடையும்” என்றார்.

The post ஐ.ஐ.ஐ.டி.-நார்வே அக்டர் பல்கலைக்கழகம் கல்வி, ஆராய்ச்சியில் மாணவர்கள் பரிமாற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Tags : GI GI GI ,Actor University of Norway ,I. GI GI TD ,Actor University ,Norway ,Chennai ,i. GI GI ,
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...