×

பெரியாறு அணை பலமாக உள்ளது: ஆய்வு செய்த துணை கண்காணிப்பு குழு திருப்தி

கூடலூர்: பெரியாறு அணை பலமாக உள்ளது என, துணை கண்காணிப்பு குழுவினர் தெரிவித்தனர். பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க உச்ச நீதிமன்றம் கண்காணிப்பு குழுவை நியமித்தது. தற்போது இக்குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணைய முதன்மை பொறியாளர் விஜயசரண் உள்ளார். இக்குழுவிற்கு உதவியாக துணை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. இதன் தலைவராக கொச்சியிலுள்ள மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சதீஷ் உள்ளார். தமிழக பிரதிநிகளாக, பெரியாறு சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், கேரள பிரதிநிதிகளாக கட்டப்பனை நீர்ப்பாசன செயற்பொறியாளர் ஹரிக்குமார், உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் உள்ளனர்.

ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் துணை கண்காணிப்பு குழுவினர் நேற்று காலை அணையை ஆய்வு செய்தனர். அப்போது அணையின் நீர்மட்டம் 118 அடியாக இருந்ததுர். முன்னதாக மெயின் அணை, பேபி அணை, கேலரிப்பகுதி, அணையின் சீப்பேஜ் வாட்டர் (கசிவுநீர்) குறித்தும் ஆய்வு நடத்தினர். அணையின் 13 மதகுகளில், 1, 4 மற்றும் 8 ஆகியவற்றின் இயக்கத்தை சரிபார்த்தனர். இதைத்தொடர்ந்து, துணைக்குழு ஆலோசனைக் கூட்டம் குமுளியிலுள்ள உயர்நிலை கண்காணிப்பு குழு அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின் அதிகாரிகள் கூறுகையில், ‘‘எங்கள் ஆய்வின்படி, அணையின் மதகுகளில் ஆர் 1, வி 1 மற்றும் வி 3 ஆகியவற்றின் இயக்கம் சீராக இருக்கிறது. அதேபோல், அணையின் சீப்பேஜ் வாட்டர் (கசிவுநீர்) நிமிடத்திற்கு 25.68 ஆக இருந்தது. இது தற்போதைய நீர்மட்டம் 118 அடிக்கு மிகத்துல்லியமாக உள்ளது. இதனால் அணை பலமாக உள்ளது’’ என்றனர்.

The post பெரியாறு அணை பலமாக உள்ளது: ஆய்வு செய்த துணை கண்காணிப்பு குழு திருப்தி appeared first on Dinakaran.

Tags : Periyaru dam ,Cuddalore ,Goriyaru Dam ,Dinakaran ,
× RELATED முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வு..!!