×

கள்ளச்சாராய பலி விவகாரம் விஏஓ, கிராம உதவியாளர் 3 போலீசார் சஸ்பெண்ட்

மரக்காணம்: மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 13 பேர் பலியான விவகாரத்தில் விஏஓ, கிராம உதவியாளர், 3 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியர்குப்பத்தில் கடந்த சனிக்கிழமை அமரன் என்பவர் விற்ற எரிசாராயத்தை அப்பகுதியை சேர்ந்த பலர் குடித்துள்ளனர். இதில், 13 பேர் பலியாகி உள்ளனர். 37க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக அமரன் உட்பட 4 சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளர் அருள் வடிவழகன், உதவி ஆய்வாளர் தீபன், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் மரியா சோபி மஞ்சுளா மற்றும் உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மரக்காணம் காவல்நிலையத்தில் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டர் தீபன், ஏட்டு மகாலிங்கம், தனிப்பிரிவு தலைமை காவலர் ரவி ஆகியோரும் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதே காவல்நிலையத்தில் பணிபுரியும் பல காவலர்கள் இடமாற்றம் செய்யப்படலாம் என தெரிகிறது. இதேபோல், மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராய விற்பனை நடைபெறுவதை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லாத காரணத்தால், மரக்காணம் தெற்கு விஏஓ சதாசிவம் மற்றும் கிராம உதவியாளர் மாரிமுத்து ஆகிய 2 பேரையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என விழுப்புரம் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, மரக்காணம் வட்டாட்சியர் பாலமுருகனுக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து வட்டாட்சியர் சம்பந்தப்பட்ட 2 ஊழியர்களிடம் விசாரணை நடத்தி 2 பேரையும் சஸ்பெண்ட் செய்தார்.

The post கள்ளச்சாராய பலி விவகாரம் விஏஓ, கிராம உதவியாளர் 3 போலீசார் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Marakkanam ,VAO ,Marakkana ,Dinakaran ,
× RELATED அசுர வேகத்தில் சென்றபோது கார்...