×

ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் பயன்பாட்டினால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்: சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி பேட்டி

சென்னை: ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் பயன்பாட்டினால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் பொறுப்புள்ள செயற்கை நுண்ணறிவு மையம் நேற்று தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஐஐடி இயக்குனர் காமகோடி, டிஜிட்டல் இந்தியா தலைமை செயல் அதிகாரி அபிஷேக் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். அரசு மற்றும் தனியார் பயன்பாட்டில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்சை பயன்படுத்துவது தொடர்பான கொள்கை, ஆலோசனை மற்றும் பரிந்துரைகளை வழங்கும் அமைப்பாக இது உருவாக்கப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு பின் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி நிருபர்களிடம் கூறியதாவது: ஒரு காலத்தில் மென்பொருட்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் சொல்லிக் கொடுத்தோம். தற்போது மென் பொருட்கள் தானாக யோசித்து செயல்பட தொடங்கி விட்டன. அவற்றை எவ்வாறு நாம் கட்டுப்படுத்துவது என்பது குறித்த கடமை தற்போது ஏற்பட்டு உள்ளது. அதன் காரணமாகத்தான் தற்போது இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ட் செயல்பாடுகளை கண்காணிக்க உள்ளது மற்றும் ஒரு ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ட் உருவாக்கப்படும் போது அது எவ்வாறு உருவாக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகளை வழங்க உள்ளது.

குறிப்பாக வங்கி நிர்வாகம் குறித்த ஒரு ஆர்ட்டிஃபிசியல் இன்டெலிஜென்ட் உருவாக்கப்படுகிறது என்றால் அதற்கு கணிதவியல் நிபுணர்கள் மற்றும் வங்கி மேலாளர்களின் ஆலோசனை முக்கியம் என்பது குறித்தான ஆலோசனைகளை அதன் தயாரிப்பாளர்களுக்கு வழங்க உள்ளது. மேலும் அரசு துறைகள் பயன்படுத்தும் ஆர்ட்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ் குறித்த வரைமுறைகளையும் நாங்கள் உருவாக்க உள்ளோம். மேலை நாடுகளில் பயன்படுத்தும் ஒரு ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜெண்டை அப்படியே இங்கு பயன்படுத்த முடியாது.

இந்தியா மற்றும் தமிழ்நாட்டிற்கென தனியான தரவுகளை அதற்கு வழங்க வேண்டும். ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் பயன்பாடு அதிகரித்தால் வேலைவாய்ப்பு குறையும் என சிலர் தெரிவிக்கின்றனர். ஆனால் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ட் பயன்பாட்டினால் வேலை வாய்ப்பானது இன்னும் அதிகரிக்க உள்ளது. தற்போது, மருத்துவம், கல்வி, உற்பத்தி ஆகிய துறைகளில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் பயன்படுத்துவது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளோம். பாஷனி என்னும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ட் தயார் செய்து வருகிறோம். அது ஆங்கிலத்தில் இருக்கும் பாடத்தை இந்தி போன்ற மொழிகளில் தயார் செய்வதை செய்து வருகிறது.

The post ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் பயன்பாட்டினால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்: சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kamakodi ,IIT ,Kindi, Chennai ,
× RELATED நீரியல் நிபுணர் இரா.க.சிவனப்பன் காலமானார்..!!