×

மே 28ல் மீண்டும் தேர்தல்? துருக்கி அதிபர் தேர்தலில் எர்டோகன் முன்னிலை

அங்காரா: துருக்கியில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று முன்தினம் நடந்தது. இதில் தற்போதைய அதிபர் எர்டோகனுக்கு எதிராக 6 எதிர்க்கட்சிகளின் சார்பில் கெமால் கிலிச்டாரோலு பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இந்நிலையில், துருக்கி தலைமைத் தேர்தல் ஆணையர் அகமத் யீனெர் பத்திரிகையாளர் சந்திப்பில், “அதிபர் தேர்தலில் தற்போதைய நிலையில் யாரும் ஆட்சி அமைக்க தேவையான வாக்குகள் சதவீதத்தை பெறவில்லை. அதிபர் எர்டோகன் 49.51% வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். கிலிச்டாரோலு 44.88% வாக்குகள் பெற்றுள்ளார். 3வது அணியை சேர்ந்த சினான் ஓகன் 5.17% வாக்குகள் பெற்றுள்ளார்.

35,874 வெளிநாட்டினரின் வாக்குகள் எண்ணப்படவில்லை. அவை அனைத்தையும் சேர்த்தால் கூட எர்டோகனுக்கு 49.54% வாக்குகள் மட்டுமே கிடைக்கும்,” என்று தெரிவித்தார். துருக்கி சட்டத்தின்படி, அதிபர் தேர்தல் வாக்குகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறுபவரே அதிபராக முடியும். இருவருக்கும் 50% கிடைக்காத நிலையில் வரும் 28ம் தேதி மீண்டும் அதிபர் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், எம்பி.க்களுக்கான தேர்தலில் எர்டோகனின் நீதி மற்றும் மேம்பாட்டு கட்சி மற்றும் கூட்டணி கட்சிகள் 321 இடங்களிலும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி 216 இடங்களிலும் குர்திஷ் ஆதரவு கட்சி 66 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

The post மே 28ல் மீண்டும் தேர்தல்? துருக்கி அதிபர் தேர்தலில் எர்டோகன் முன்னிலை appeared first on Dinakaran.

Tags : Erdogan ,Turkey ,Ankara ,Dinakaran ,
× RELATED துருக்கியில் கேளிக்கை விடுதியில்...