×

ஏலகிரிமலை காப்புக்காட்டுக்குள் புகுந்த யானைகள்: விரட்டிச்சென்ற வாலிபரை தும்பிக்கையால் தூக்கி வீசியது

ஜோலார்பேட்டை: நாட்றம்பள்ளில் இருந்த யானைகள் ஜோலார்பேட்டை வழியாக ஏலகிரிமலை காப்புக்காட்டுக்குள் புகுந்தது. அப்போது அவற்றை விரட்டிச்சென்ற வாலிபர் ஒருவரை ஒரு யானை தும்பிக்கையால் தூக்கி வீசியது. கர்நாடக வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 5 காட்டு யானைகளில் 2 யானைகள் ஆந்திர வனப்பகுதிக்குள் புகுந்தது. பின்னர் இந்த யானைகள் திருப்பத்தூர் மாவட்ட வனப்பகுதிக்குள் வந்தது. நேற்று காலை நாட்றம்பள்ளி அருகே உள்ள ஆத்தூர்குப்பம் தண்ணீர்பந்தல் என்ற இடத்தில் சென்னை-பெங்களூர் சாலையை 2 யானைகள் கடந்து சென்றது. இதைப்பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் நேற்றிரவு ஜோலார்பேட்டை அடுத்த திரியாளன் பகுதியில் உள்ள ஏரியில் முகாமிட்ட யானைகள் இன்று அதிகாலை ஜோலார்பேட்டை அருகே உள்ள குடியானகுப்பம் வழியாக சோலையூர், ரெட்டியூர், சின்னக்கம்மியம்பட்டு வழியாக சென்றது. அதனை பொதுமக்கள் பின்தொடர்ந்து விரட்டினர். இதனால் அந்த 2 யானைகளும் வாணியம்பாடி-திருப்பத்தூர் சாலையை கடந்து பொன்னேரி ஊராட்சி கவுண்டப்பனூர் காந்திநகரில் நுழைந்தது. பின்னர் ஊசிநாட்டான் வட்டம் பகுதி ஏலகிரிமலை அடிவாரம் காப்பு காட்டுக்குள் யானைகள் சென்றது.

அப்போது யானையை பின்தொடர்ந்து விரட்டிச்சென்ற சின்ன கம்மியம்பட்டு பகுதியை சேர்ந்த லோகேஷ்(28) என்பவரை திடீரென ஒரு யானை திரும்பி தும்பிக்கையால் தூக்கி வீசியது. இதில் சிறுகாயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இவரை அங்கிருந்த வனத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த 2 யானைகளின் நடமாட்டத்தால் ஜோலார்பேட்டை சுற்றுப்பகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் பீதி அடைந்துள்ளனர். ஆனால், ஏலகிரிமலை காப்பு காட்டில் யானைகள் தஞ்சமடைந்துள்ளதால் பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என வனத்துறையினர் தெரிவித்தனர்.

ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரிமலையின் பின்புறம் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சிக்கு தினமும் ஏராளமானோர் வந்து உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர். மேலும் நீர்வீழ்ச்சியின் அருகே உள்ள முருகன் கோயிலுக்கும் ஏராளமான பக்தர்கள் வந்துசெல்கின்றனர். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சுற்றித்திரிந்த யானைகள் தற்போது ஜலகாம்பாறை காட்டுப்பகுதி வழியாக செல்ல வாய்ப்புள்ளதால் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் வரவேண்டாம். மேலும் அங்கு யாரும் குளிக்கவேண்டாம், அங்குள்ள முருகர்கோயிலுக்கும் பக்தர்கள் யாரும் வரவேண்டாம் என வனத்துறை தெரிவித்துள்ளது.

The post ஏலகிரிமலை காப்புக்காட்டுக்குள் புகுந்த யானைகள்: விரட்டிச்சென்ற வாலிபரை தும்பிக்கையால் தூக்கி வீசியது appeared first on Dinakaran.

Tags : Elagrimala Resurrection ,Jolarpet ,Nadrampalla ,Zolarpet ,Elagrimala Insulation ,of Aelagrimala Insulation ,Dinakaran ,
× RELATED சிக்னல் கோளாறால் சென்னை ரயில் நடுவழியில் நிறுத்தம்: பயணிகள் அவதி