×

நன்றாக இருக்கிறது குரு சிஷ்ய லட்சணம்?

நன்றி குங்குமம் ஆன்மிகம்

சுவாமி ராமானுஜர் வைணவ தரிசனத்தை வையகம் எல்லாம் பரப்புவதற்காக 74 வைணவ பரப்புநர்களை ஆச்சார்ய புருஷர்களாக ஏற்படுத்தினார். அவர்களை 74 சிம்மாசனாதிபதிகள் என்று வைணவ மரபில் அழைப்பார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பகுதியைப் பிரித்துக் கொடுத்து, அந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு வைணவ கருத்துக்களைச் சொல்லி, அவர்களிடத்திலே வைணவத்தின் ஏற்றத்தை எடுத்துரைக்க வேண்டும்.

தீதில் நன்னெறியான வைணவ நெறி திக்கெங்கும் பரவிட வேண்டும் என்று ஒரு ஏற்பாட்டினைச் செய்திருந்தார் ஸ்ரீராமானுஜர். அப்படி, ஸ்ரீராமானுஜர் ஏற்படுத்திய 74 சிம்மாசன அதிபதிகளில் ஒருவர் கிடாம்பியாச்சான் என்பவர். ஆச்சாரிய அபிமானம் தவிர ஜீவன் உய்வடைய வேறு வழியில்லை; “உய்வடைய ஒரே வழி உடையவர் திருவடி” என்பதை, ஆணித்தரமாக நம்பியவர் கிடாம்பியாச்சான்.

ராமானுஜருக்கு தாய்மாமனான பெரிய திருமலை நம்பி, கிடாம்பி ஆச்சானுடைய அத்தையின் கணவர் என்று எதிராச வைபவத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆழ்ந்த தமிழ் ஞானமும், சம்பிரதாய ஞானமும் ஆழ்வார்கள் பாசுரங்களில் அறிவுமிக்க கிடாம்பியாச்சான், நம்மாழ்வாரின் திருவிருத்தத்திற்கு ஒரு அழகான தமிழ்ப் பாசுரத்தை தனியனாக அருளிச் செய்திருக்கிறார். சித்திரை மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் அவதரித்தவர்.

ஒரு குரு எப்படி இருக்க வேண்டும்? ஒரு சீடன் எப்படி இருக்க வேண்டும்? என்பது குறித்து வைணவ சமயத்தில் அழகாக சொல்லப்பட்டு இருக்கிறது. எப்பொழுதும் சிஷ்யன், குருவினுடைய திருமேனி, அதாவது அவர் உடம்பு ஆரோக்கியமாக இருப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். காரணம், குரு திடகாத்திரமாகவும், நல்ல ஆரோக்கியமாகவும் இருந்தால்தான், எந்தவிதக் கவலையும் இன்றி, ஞான விஷயங்களை அவரால் சீடர்களுக்கு எடுத்துரைக்க முடியும். குரு, தன்னுடைய உடம்பைப்பற்றி பெரிதும் கவலைப்பட மாட்டார்.

தனக்கு என்ன இருக்கிறது? தன்னுடைய குடும்பத்துக்கு என்ன தேவை? என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்பட மாட்டார். குருவினுடைய ஆரோக்கியத்தில் கண் வைத்தவராக சீடன் இருக்க வேண்டும். ஆகையினால் குருவின் குடும்பத்தின் தேவைகளைப் பகிர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டிய கடமை சீடர்களுக்கு உண்டு.

அப்படியானால், குருவுக்கு என்ன கடமை என்று கேட்கலாம். குரு எப்பொழுதும் சீடனுடைய ஞானத்தில் கண் வைத்தவராக இருக்க வேண்டும். அவன் எந்த விதத்திலும் மனக்கேடு அடையாமல் சரியான வழியில் பாடங்களை ஏற்றுக்கொள்ளும்படியாகச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். அவனுடைய கல்வி விருத்தியில் நாட்டம் உள்ளவராக இருக்க வேண்டும். அவனை எப்படி எல்லாம் நல்வழிப்படுத்தி ஆத்மாவை உய்வடையச் செய்யலாம் என்பதில் கவனம் இருக்க வேண்டும். முக்கியமாக, சீடனுடைய ஞான அபிவிருத்தியில் கண் வைத்திருக்க வேண்டும், என்பது ஒரு சீடனுக்கும் குருவுக்கும் உள்ள ஏற்பாடு.

ஆசாரியன் சிச்சன் ஆருயிரைப் பேணுமவன்
தேசாரும் சிச்சனவன் சீர் வடிவை – ஆசையுடன்
நோக்குமவன் என்னு நுண் அறிவைக் கேட்டு வைத்தும்
ஆர்க்கும் அந்நேர் நிற்கை யரிதாம்
இதை மிக அழகாகக் கடைப்பிடித்தவர் கிடாம்பியாச்சான்.

அவர் எப்பொழுதும் எம்பெருமானார் நல்ல ஆரோக்கியமாக இருக்க வேண்டும், அவருடைய உடம்புக்கு எந்த விதமான ஆரோக்கியகுறைவும் வந்துவிடக்கூடாது என்று கைங்கரியங்களைப் பார்த்துப் பார்த்துச் செய்வார். இவர் ராமானு ஜருக்கு அமுது படைத்துத் தரும் மடைப்பள்ளி கைங்கரியத்தை மனம் உகந்து ஏற்றுக்கொண்டார். அப்படி அவர் ஏற்றுக் கொண்டதற்கான ஒரு காரணம் உண்டு.

ஒரு முறை ராமானுஜர், செய்ய முனைந்த திருவரங்கச் சீர்திருத்தங்களை எதிர்த்த அங்குள்ள சிலர், எப்படியாவது ராமானுஜருக்கு கெடுதல் விளைவிக்க வேண்டும் என்று கருதினர். அவருடைய உயிருக்கே உலை வைக்க வேண்டும் என்று திட்டமிட்ட அவர்கள், ராமானுஜர் உஞ்சவிருத்தி செய்யும் பொழுது உணவில் விஷம் கலந்து கொடுக்க நினைத்தனர்.

இறைவனுடைய திருவுள்ளத்தினால் எப்படியோ அந்தத் தீமையில் இருந்து ராமானுஜர் தப்பித்தார். ஆனாலும், தன்னைக் கொல்ல நினைப்பவர்கள்கூட இருக்கிறார்களே என்று வருத்தப்பட்டார். நமக்கும் விரோதிகள் உண்டோ, அப்படியானால் நாம் செய்த தவறு என்ன, என்றெல்லாம் நினைத்த ராமானுஜர், இனி உணவு உட்கொள்ளப் போவதில்லை என்று சில நாட்கள் பட்டினி கிடந்தார்.

ராமானுஜரின் உடல்நிலை நாளுக்கு நாள் நலிந்தது. இதைக் கேள்விப்பட்ட அவருடைய குருவான திருக்கோட்டியூர் நம்பிகள், ராமானுஜரின் உண்ணாநோன்பினைக் கைவிடச்செய்வதற்காக திருக்கோட்டியூரில் இருந்து திருவரங்கம் வந்தார். குரு வருவதைத் தெரிந்து கொண்ட ராமானுஜர், அவரை எதிர்கொண்டு அழைப்பதற்காக, ஸ்ரீரங்கத்தில் இருந்து புறப்பட்டு, எதிர் வரவேற்புக்காக வந்தார். அது கடுமையான சித்திரை மாத வெயில் காலம்.

காவிரியில் நீரில்லாமல் வறண்டு மணல் கொதித்துக்கொண்டிருந்தது. ஆற்றின் நடுப்பகுதியில், திருக்கோட்டியூர் நம்பிகளை வரவேற்க வந்த ராமானுஜர், ஆச்சாரியனுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக அந்த கொதிமணலில் விழுந்து வணங்கினார். வைணவத்தில் ஒரு மரபு உண்டு. ஆச்சாரியன், ‘‘எழுந்திரு’’ என்று சொல்லும் வரையில், எழுந்திருக்கக்கூடாது. பொதுவாகவே ஆச்சாரியர்கள் வணங்கிய உடனே எழுந்திரு என்று சொல்லிவிடுவார்கள். ஆனால், அன்று சோதனையாக திருக்கோட்டியூர் நம்பிகள் ராமானுஜரை எழுந்திரு என்று சொல்லவில்லை. அது சுடுமணல்.

ஆச்சாரியனுக்கு என்ன ஆகுமோ என்று சீடர்கள் தவித்துக்கொண்டிருக்க, கிடாம்பியாச்சான் என்கின்ற சீடர் ராமானுஜரை வாரி எடுத்து, ‘‘நன்றாக இருக்கிறது உங்களுடைய குரு சிஷ்ய லட்சணம்? இப்படியா ஒருவரை கொதிமணலில் வேகும்படி செய்வது? என் ஆச்சாரியாரின் உடம்பு என்ன ஆவது?’’ என்று திருக்கோஷ்டியூர் நம்பிகளை பார்த்துக் கேட்க, திருக்கோஷ்டியூர் நம்பிகள், ‘‘ராமானுஜரின் உடம்பு மீது பற்று கொண்ட ஒருவரை அல்லவா தேடி வந்தேன்.

ராமானுஜரே… இனி நீர் உஞ்சவிருத்திச் செய்ய வேண்டாம். உன்னுடைய மடத்திலே இந்த சீடன் ஏக பிச்சையாக தளிகை (உணவு) படைத்துத் தருவார்.’’ என்று கிடாம்பியாச்சானை மடைப்பள்ளிக்கு நியமித்து அருளினார்.அவர் திருநட்சத்திரம் (சித்திரை ஹஸ்தம்) அன்று எல்லாத் திருக்கோயில்களிலும் வைணவர்கள் திருமாளிகைகளிலும் அனுஷ்டிக்கப்படும். அவர் வம்சத்தில் வந்தவர்கள் இன்றும் இருக்கின்றார்கள். அவர் வம்சத்தில் வந்த கிடாம்பி அப்புள்ளார் என்னும் ராமானுஜாச்சாரியரே சுவாமி வேதாந்த தேசிகருக்கு மாமாவும் ஆச்சாரியரும் ஆவார்.

தொகுப்பு: முனைவர் ஸ்ரீராம்

The post நன்றாக இருக்கிறது குரு சிஷ்ய லட்சணம்? appeared first on Dinakaran.

Tags : Kunkumam Spiritum ,Swami ,Ramanujar ,
× RELATED ராமகிருஷ்ண மிஷனின் புதிய தலைவராக சுவாமி கவுதமானந்தாஜி மகாராஜ் தேர்வு