×

ஒரு ரூபாய்க்கு தையல் பயிற்சி!

நன்றி குங்குமம் தோழி

‘டெய்லர் ப்ரோ’ என்ற பெயரில் யுடியூப்பில் சேனல் ஒன்றை தொடங்கி துணிகள் தைப்பது எப்படி என்பது குறித்து வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார் விருதுநகரை சேர்ந்த செல்வகுமார். இவருடைய வீடியோக்களை பார்த்த பல பெண்கள் வீட்டிலேயே சொந்தமாக தையல் மெஷின் வைத்து துணிகளை தைத்து அதன் மூலம் வருமானம் பார்த்து வருகிறார்கள். இதில்லாமல் பக்கத்து ஊர்களுக்கெல்லாம் சென்று வீட்டிலிருக்கும் பெண்களிடம் ஒரு ரூபாயை மட்டுமே வாங்கிக் கொண்டு தையல் பயிற்சிகளை சொல்லித் தருகிறார் இவர். ஒரு ரூபாயில் எப்படி தையல் பயிற்சி என்ற நம் கேள்விக்கு செல்வகுமார் விளக்கம் அளித்தார்.

‘‘நான் அதிகமா படிக்கல. என் அம்மா தையல் வேலை பார்த்து வந்தாங்க. அவங்களின் வருமானத்தில் தான் எங்க குடும்பம் நகர்ந்ததுன்னு சொல்லணும். சின்ன வயசில் இருந்தே அம்மாவின் தையல் மெஷின் சத்தம் கேட்டு வளர்ந்ததால், எனக்கும் அதைக் கற்றுக் கொள்ளணும்ன்னு விருப்பம் ஏற்பட்டது. என்னுடைய 15 வயதில் இருந்தே அம்மாவிடம் கொஞ்சம் கொஞ்சமாக தையல் கலையினை கற்றுக் கொள்ள ஆரம்பிச்சேன். அதன் பிறகு நானும் அந்த தொழிலுக்குள் வந்துட்டேன்.

எனக்கு ஒரு தங்கச்சி. ஒரு அண்ணன் இருக்காங்க. நான் தைப்பதைப் பார்த்து என் தங்கச்சியும் என்னிடம் தையல் சொல்லித் தரச்சொல்லிக் கேட்பா. அவள் எங்க வீட்டு மகாராணி என்பதால், நாங்க எல்லாருமே அவளை ரொம்ப பாசமாக வளர்த்தோம். அதனால்தான் என்னவோ எனக்கு அவளுக்கு சொல்லித் தரவேண்டும் என்று தோன்றவில்லை. ஆனால் அது நான் செய்த பெரிய தவறு என்று பிறகு தான் உணர்ந்தேன். தங்கைக்கு கல்யாணம் செய்து வைத்தோம்.

ஆனால் சில வருடங்களில் அவளின் குடும்பத்தின் சூழல் காரணமாக அவ தற்கொலை செய்து கொண்டாள்.அவளுக்கு நான் சின்ன வயசுலேயே இந்த கலையை சொல்லிக் கொடுத்திருந்தால், அவளும் சொந்தமா கடை வச்சு தொழில் செய்து இருப்பா. வறுமை இருந்திருக்காது. இப்போ உயிரோட இருந்திருப்பான்னு எனக்கு குற்ற உணர்ச்சியா இருந்துச்சி. அதே நேரத்தில நிறைய பெண்கள் இதே மாதிரி குடும்ப சூழ்நிலை காரணமா தற்கொலை பண்ணிக்கிறாங்க. என் தங்கச்சிக்கு வந்த நிலைமை மாதிரி மத்த எந்த பெண்களுக்கும் வரக்கூடாது. அவங்களுக்கு ஏதாவது செய்யணும்னு நினைச்சேன். அதுக்காக நான் என் ஊர்ல இருக்கிற பெண்களுக்கு தையல் வேலையை சொல்லி கொடுக்க ஆரம்பிச்சேன். இலவசமாக சொல்லிக் கொடுத்தா நல்லா இருக்காது என்பதால் நான் சொல்லிக் கொடுக்கக் கூலியா ஒரு ரூபாய் மட்டும் வாங்கிக் கொண்டேன்.

வாரத்துல இரண்டு நாள் வகுப்புகள் நடக்கும். பல பெண்கள் ஆர்வமா கலந்துகிட்டு தையல் வேலையை வீட்டிலிருந்தபடியே செய்ய தொடங்கினாங்க. நான் என் ஊர் பெண்களுக்கு சொல்லிக் கொடுக்கிறத பார்த்த மற்ற ஊர் பெண்களும் தங்களுக்கும் சொல்லிக் கொடுக்க சொல்லி கேட்டாங்க. மற்ற ஊர்களுக்கும் சென்று சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன். இதே காலகட்டங்களில் நான் டிக்டாக்கில் பாட்டு பாடுறது, டான்ஸ் ஆடறதுன்னு சில வீடியோக்கள் போடுவேன். அதை பார்த்த பலர், எப்போதும் இதே மாதிரி வீடியோக்களே போடுறீங்களே… என்னதான் வேலை செய்றீங்க. உங்களிடம் வேற திறமைகள் இல்லையான்னு கேட்டாங்க. அப்பதான் நாம செய்ற வேலையை ஏன் வீடியோக்களாக எடுத்து போடக்கூடாதுனு யோசனை வந்தது.

என் பொண்ணுக்காக நானே ஒரு துணி தைச்சேன். அதை வீடியோவா எடுத்து டிக்டாக்கில் பதிவு செய்தேன். சில நாட்களில் பல மில்லியன் பார்வையாளர்கள் அந்த வீடியோவை பார்த்தாங்க. அதோட பல பேரு எப்படி துணி தைக்கிறீங்கன்னு சொல்லி கொடுங்கன்னு கேட்க ஆரம்பிச்சாங்க. டிக்டாக்ல 30 செகண்ட் தான் வீடியோ பதிவேற்ற முடியும். முழுமையாக ஒரு துணியை தைத்து காண்பிக்க முடியாது.

அதனால நண்பர்களுடன் சேர்ந்து யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கினேன். எல்லாரும் என்னை செல்வகுமார் அண்ணான்னு கூப்பிடுவாங்க. அதனாலேயே ‘டெய்லர் ப்ரோ’ என பெயர் வைத்தேன். அதன் பிறகு அடிப்படை விஷயத்தில் இருந்து ஒவ்வொரு வீடியோக்களை பதிவு செய்ய ஆரம்பித்தேன். குறிப்பாக அதை எளிமையாக எப்படி மக்களுக்கு சொல்லித் தரலாம்ன்னு யோசிச்சு வீடியோக்களை செய்ய தொடங்கினேன்’’ என்றவர் பல பெண்களுக்கு தையல் தொழிலை சொல்லி கொடுத்து சொந்தமாக கடை வைக்கவும் உதவிகளை செய்துள்ளார்.
‘‘பெரும்பாலான ஆண்கள் ரெடிமேட் ஆடைகளைதான் விரும்புகின்றனர். பெண்களுக்கான உடைகளைதான் கடைகளில் அதிகம் தைக்கிறார்கள். அதனால் பெண்களுக்கான துணிகளை எப்படி தைக்கலாம் என்றுதான் நான் வீடியோக்களை வெளியிட்டேன். ஒவ்வொரு வீடியோவிலும் என்ன துணி தைக்கப் போகிறோம் என்பது குறித்து குறிப்பிடுவேன்.

மேலும் என்னுடைய யுடியூப் சேனல் குறித்து டிக்டாக்கில் சொன்னேன். அதன் மூலம் பலர் சப்ஸ்கிரைப் செய்தாங்க. நான்கு மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. இவ்வளவு பேர் தையல் தொழிலை செய்ய விரும்புகிறார்களா என அப்போது தான் தெரிந்து கொண்டேன். தொடர்ச்சியாக வீடியோக்கள் வெளியிடுவதோடு பக்கத்து ஊர்களுக்கும் சென்று பல பெண்களுக்கு சொல்லியும் கொடுத்து வந்தேன்.

அதில் ஆர்வமிருக்கும் பெண்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்து கடை ஒன்றை நடத்த ஏற்பாடுகள் செய்து கொடுத்தேன். பெண்களுக்கு இது ஏற்ற துறை. காரணம், அவர்கள் வீட்டை கவனித்துக் கொண்டே, வேலை பார்த்து சம்பாதிக்கலாம். மேலும் குடும்ப செலவுகளில் தங்களுடைய வருமானமும் இருக்க வேண்டும் எனவும் நினைக்கிறார்கள். இது ஒருபுறம் இருந்தாலும் ஆண்கள் பெண்களை வெளி வேலைகளுக்கு செல்ல அனுமதிப்பதில்லை. அவர்களுக்கும் இந்த தொழில் ஒரு பக்கபலமாக இருக்கும். பிரச்னைகளை மறந்து வேலையில் கவனம் செலுத்தும் போது, பிரச்னைக்கான தீர்வையும் யோசிக்க முடியும்.

யுடியூப் என்பதால், கற்றுக் கொள்ளும்போது நிறைய சந்தேகங்கள் வரும். அதற்கான தனிப்பட்ட வீடியோவும் வெளியிடுவேன். அப்படியும் சிலருக்கு சந்தேகங்களை தீர்க்க முடியாது. அவர்களுக்கு நேரில் பயிற்சி வகுப்புகளை நடத்தலாம் எனத் தோன்றியது. இதற்கான பயிற்சி வகுப்புகளை நடத்த இடங்களை தேர்வு செய்தோம். ஆரம்பத்தில் 200 பெண்கள் நேரடி பயிற்சிக்கு இணைந்தார்கள். இதில் தையல் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் இருந்ததால், ஒவ்வொரு பயிற்சியையும் நான்கு கட்டங்களாக பிரித்தோம்.

முதல் கட்டம் தையலின் பேசிக் விஷயங்களை சொல்லித் தருவது. அடுத்து துணிகளை அளவெடுத்தல், அடுத்து கட்டிங், தைப்பது. கடைசி கட்டமாக கேள்வி – பதில் நேரம் நடக்கும். இதில் இடையிடையே நாங்கள் சொல்லி தந்தவற்றை அவர்கள் புரிந்து கொண்டார்களா என்பதை அறிய தேர்வுகளும் நடத்துவோம். சென்னையில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் ஆண் – பெண் என 1500 பேர் கலந்து கொண்டனர். ஒரு கோடி தையல் கலைஞர்களை உருவாக்குவதுதான் என்னுடைய இலக்கு. அதுவரை என்னுடைய ஓட்டம் நிற்காது’’ என்றார் வைராக்கியத்தோடு செல்வகுமார்.

தொகுப்பு : மா.வினோத்குமார்

The post ஒரு ரூபாய்க்கு தையல் பயிற்சி! appeared first on Dinakaran.

Tags : YouTube ,Taylor Pro ,Dinakaran ,
× RELATED யூடியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்தவர் கைது..!!