×

புதுச்சேரியில் நடுரோட்டில் போதை இளம்பெண் ரகளை: வலைதளங்களில் வீடியோ வைரல்

புதுச்சேரி: புதுச்சேரி நகரப் பகுதியில் நூற்றுக்கணக்கான மதுக்கடைகள் ஏற்கனவே இயங்கி வரும் நிலையில், தற்போது ரெஸ்டோ-பார் எனப்படும் நடன அரங்கத்துடன் கூடிய மதுபார்களுக்கு அரசு அனுமதி வழங்கி வருகிறது. இதனால் குடியிருப்புகள், கோயில், பள்ளி அருகே ரெஸ்டோ பார் திறக்க மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதோடு நள்ளிரவு வரை ரெஸ்டோ பார் திறந்து செயல்பட சிறப்பு அனுமதி அளிக்கப்படுவதால், நள்ளிரவுக்கு மேல் மதுஅருந்தி கொண்டாடி விட்டு, நள்ளிரவு, அதிகாலைக்கு மேல் தான் விடுதிகளுக்கு திரும்புகின்றனர். அப்போது ஒரு சில இடங்களில் விபத்துகள் ஏற்படுகிறது.

ஏற்கனவே புதுச்சேரியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இதனால் புதுச்சேரி இளைஞர்கள் மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி, சமீபகாலமாக ஆங்காங்கே போதையில் இளைஞர்கள் ஒன்றுகூடி சாலையில் செல்லும் பொதுமக்களை தாக்கி, மிரட்டும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற ஒரு சம்பவத்தில் தான் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு லப்போர்தனே வீதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற இன்ஜினியரிங் பட்டதாரி விஷால் (25) என்பவரை ஒரு கும்பல் தாக்க முயன்றபோது, அவர் நிலை தடுமாறி சாலையோர மரத்தின் மீது மோதி பலியாகினார்.

தற்போது அதே வீதியில் உள்ள ரெஸ்டோ பாரில் குடித்துவிட்டு நள்ளிரவு 12 மணியளவில் போதையில் சில இளைஞர்களும் சாலையை மறித்துக் கொண்டு சிகரெட் பிடிப்பதும், பெண் ஒருவர் போதையில் அட்டகாசம் செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் இளம்பெண் ஒருவர், சாலையில் நடுவே அமர்ந்து கொண்டு போக்குவரத்திற்கு இடையூறாக ரகளையில் ஈடுபடுவதும், அவரை சில இளைஞர்கள் சமாதானம் செய்து அழைத்து செல்வதும் பதிவாகியுள்ளது. இதுகுறித்த புகாரின்பேரில் ஒதியஞ்சாலை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post புதுச்சேரியில் நடுரோட்டில் போதை இளம்பெண் ரகளை: வலைதளங்களில் வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Nadurode ,Puducherry ,Resto-Bar ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு