×

புழல் அருகே பரிதாபம்: கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி

புழல்: சென்னை புழல் அருகே காவாங்கரை, குருசாந்தி நகர், மாநகராட்சி பூங்கா அருகே ராஜேந்திரன் என்பவர் சொந்த வீடு கட்டி, தனது மனைவி நிர்மலா மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது வீட்டின் முன்பக்கத்தில் மாடி படிக்கட்டு அருகே பூமிக்கு அடியே கழிவுநீர் தொட்டி அமைத்துள்ளார். இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன் இத்தொட்டியில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியே கசிந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நேற்று மாலை செங்குன்றம் அருகே எம்.ஏ நகரை சேர்ந்த பாஸ்கரன், கணேசன் ஆகிய இருவரையும் கழிவுநீர் தொட்டி அடைப்பை நீக்க ராஜேந்திரனின் மனைவி நிர்மலா அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை 9 மணியளவில் செங்குன்றத்தை சேர்ந்த கணேசன், பாஸ்கரன் ஆகிய இருவரும் கழிவுநீர் தொட்டி அடைப்பை நீக்க ராஜேந்திரனின் வீட்டுக்கு வந்துள்ளனர். பின்னர் இருவரும் கழிவுநீர் தொட்டியின் மேல்மூடியை நீக்கிவிட்டு, முதலில் பாஸ்கரன் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி கயிறு கட்டி தொட்டிக்குள் இறங்கியதாகவும், மேலே கணேசன் கயிற்றை பிடித்ததிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் தொட்டிக்குள் கசிந்திருந்த விஷவாயு தாக்கியதில் பாஸ்கரன் மயங்கி உள்ளே விழுந்துள்ளார். இதை பார்த்ததும் கணேசனும் உள்ளே பாதுகாப்பின்றி உள்ளே இறங்கியதாகவும் கூறப்படுகிறது.

இதில் கணேசனும் மயங்கி உள்ளே விழுந்துள்ளார். இதை பார்த்ததும் அக்கம்பக்கத்தினர் அலறி சத்தம் போட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்ததும் புழல் போலீசாரும் தீயணைப்பு படையினரும் விரைந்து வந்தனர். பின்னர், கழிவுநீர் தொட்டிக்குள் விஷவாயு தாக்கியதில் இறந்து போன 2 பேரின் சடலங்களையும் தீயணைப்பு படையினர் மீட்டனர். இதுகுறித்து தகவலறிந்ததும் மாதவரம் காவல்துறை துணை ஆணையர் சக்திவேல், உதவி ஆணையர் ஆதிமூலம், புழல் இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிரமாக விசாரித்தனர்.

கழிவுநீர் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட 2 பேரின் சடலங்களை போலீசார் கைப்பற்றி, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இப்புகாரின்பேரில் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீட்டு உரிமையாளர்களிடம் பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

The post புழல் அருகே பரிதாபம்: கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Puzhal ,Rajendran ,Kavankarai ,Kurusanti Nagar ,Corporation Park ,Chennai ,Dinakaran ,
× RELATED புழல் – தாம்பரம் பைபாஸ் சாலையில்...