×

கோடை விடுமுறையை கொண்டாட வைகை அணையில் குவியும் சுற்றுலா பயணிகள்

*ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்களால் கூட்டம் ‘கூடுது’

*உல்லாச ரயில், படகு குழாமில் சிறுவர், சிறுமியர் ‘குஷி’

ஆண்டிபட்டி : கோடை விடுமுறைைய கொண்டாட, ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள வைகை அணைக்கு தினந்தோறும் சுற்றுலா பணிகளின் வருகை அதிகரித்து வருகிறது.
தேனி மாவட்டத்தில் வருசநாடு, வெள்ளிமலை, அரசரடி போன்ற மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் உருவாகும் மழைநீர் வைகை ஆற்றில் வெள்ளமாக ஓடிக் கொண்டிருந்தது. இந்த வைகை ஆற்றுக்கு குறுக்கே அணை கட்டி அந்த தண்ணீரை சேமித்து வைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக ஆண்டிபட்டி அருகே அணை கட்ட முடிவு செய்யப்பட்டு, கடந்த 1959ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. இந்த அணையின் மொத்த உயரம் 111 அடியாககும். 71 அடி வரை தண்ணீரை தேக்கி கொள்ளலாம். இந்த அணையில் இருந்து வைகை பாசனத்தின் கீழ் 1 லட்சத்து 36 ஆயிரத்து 109 ஏக்கர் பரப்பளவில் பாசனம் செய்யப்படுகிறது. அணையில் இருந்து பெரியார் பாசனத்தின் கீழ் 1 லட்சத்து 50 ஆயிரத்து 43 ஏக்கர் பரப்பளவில் பாசனம் செய்யப்படுகிறது.

இதில் 45 ஆயிரத்து 41 ஏக்கர் இருபோக பாசன பபகுதியாகவும், 85 ஆயிரத்து 563 ஏக்கர் ஒருபோக பாசன பகுதியாகவும் , 19 ஆயிரத்து 439 ஏக்கர் திருமங்கலம் பிரதான கால்வாய் பகுதியாகவும், 38 ஆயிரத்து 248 ஏக்கர் விரிவாக்கப்பட்ட பெரியார் பிரதான கால்வாயாகவும் உள்ளது. இந்த அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் 5 மாவட்ட மக்களின் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தொடர்ந்து பங்களித்து வரும் வகையில் மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலமாகவும் உள்ளது. இதனைத்தொடர்ந்து இந்த வைகை அணை பகுதியில் மீன்பிடி தொழிலும் நடந்து வருகிறது.

வைகை அணை கட்டுவதற்கு ரூ.3 கோடியை 30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. அதில் அணை கட்டி முடித்தது போக மீதம் 40 லட்சம் பணம் இருந்தது. அந்த பணத்தில் அணைப் பகுதியில் பூங்கா கட்டப்பட்டு பொதுமக்கள் சுற்றிபார்க்கும் வகையில் அமைக்கப்பட்டது.

தற்போது இந்த பூங்கா தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் திண்டுக்கல், மதுரை போன்ற வெளிமாவட்டங்களிலிருந்தும், கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வார விடுமுறை நாட்களில், தென்தமிழக மக்களுக்கு பிடித்த சுற்றுலாத் தலமான வைகை அணையில் கூட்டம் அலைமோதும். இந்த பூங்காவில் வலது கரை பூங்கா மற்றும் இடது கரை பூங்கா என பிரிக்கப்பட்டு ஏராளமான பொழுது போக்கு அம்சங்கள் செய்யப்பட்டுள்ளது. வைகை அணை இரண்டு பூங்காவை பிரிப்பதற்கு நடுவில் அமைக்கப்பட்டுள்ள பாலத்தில் இருந்து அணையின் மதகு‌ பகுதியை ரசிக்கும் காட்சி இங்கு அமைந்துள்ளது.

சிறுவர் பூங்கா, பெரியார் மாதிரி வைகை பூங்கா, பையில்வான் பார்க், காந்தி பார்க், யானை சறுக்கல், ஆங்காங்கே நீருற்று, புல் தரைகள், ஓய்வெடுக்கும் இருக்கைகள், வைகை உல்லாச ரயில், இசை நடன நீருற்று, படகு குழாம் உள்ளிட்ட ஏராளாமான சிறப்பு அம்சங்கள் செய்யப்பட்டுள்ளது. வைகை அணை பூங்காவில் நுழைவதற்கு 5 ரூபாய் மட்டும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
வைகை அணை பூங்கா பகுதிக்கு வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும்.

இதனைத் தவிர்த்து மற்ற விடுமுறை நாட்கள் விசேஷ காலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும்‌. இந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கோடை விடுமுறை நாட்கள் என்பதால் கடந்த சில நாட்களாக தினந்தோறும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. நேற்று கோடை விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் வைகை அணையில் குவிந்தனர். வலது கரை, இடது கரை என இரண்டு பூங்காக்களிலும் அதிகமாக சுற்றுலா பயணிகள் இருந்தனர். உல்லாச ரயில் பெரியவருக்கு ரூ 6ம், சிறியவருக்கு ரூ3ம், வசூலிக்கப்படுகிறது. இதனால் ரயிலில் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.

மேலும் கடந்த சில ஆண்டுகளாக உல்லாச ரயில் இயங்காமலும், இசை நடன நீருற்று செயல்படாமலும், படகு குழாம் நடைமுறைக்கு வராமலும் இருந்தது. இதனால் பூங்கா பகுதிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் சென்றனர். ஆனால் தற்போது அனைத்தும் செயல்பட்டு கொண்டிருப்பதால் பூங்காவிற்கு வந்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் சென்று வருகின்றனர்.

நீர்தேக்க பகுதியில் செல்பி ‘வேண்டாமே’

வைகை அணையின் பிரமாண்டமான தோற்றத்தை ரசிக்க தினந்தோறும் அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நிரம்பி காணப்படும் அணையை நடந்து கொண்டே ரசிப்பதற்கு மதகு பகுதிக்கு மேலே நீண்ட தூரம் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பூங்காவை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் பூங்காவையும், அணையையும் சுற்றி பார்த்து ரசிப்பதுடன், ஆபத்தை உணராமல் அணையின் நீர்தேக்க பகுதியில் நின்று செல்பி எடுத்து வருகின்றனர்.

நீரை தேக்கி வைப்பதற்காக கட்டப்பட்ட அணையின் கற்கள் பகுதியில் குடும்பமாகவும், நண்பர்களுடனும் சேர்ந்து ஆபத்தான பகுதியில் நின்று செல்பி எடுத்து வருகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதனை தடுப்பதற்கு பொதுப்பணித்துறை பணியாளர்களும் போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கோடை விடுமுறையை கொண்டாட வைகை அணையில் குவியும் சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Vaigai Dam ,
× RELATED பராமரிப்பு இன்றி கிடக்கும் வைகை அணை...