×

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளசாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

விழுப்புரம்: மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து 11 பேர் உயிரிழந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் மு.க.ஸ்டாலின் சிகிச்சை பெறுவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார். கள்ளச்சாராயம் குடித்ததில் உடல் நலம் பாதிக்கப்பட்ட 33-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் நேற்று கள்ளச்சாராயம் விற்கப்பட்டுள்ளது. அந்த கள்ளச்சாராயத்தை அதே கிராமத்தை சேர்ந்த 44 பேர் வாங்கி குடித்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்த அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கள்ளச்சாராயம் குடித்த 44 பேரும் முண்டியபாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சுரேஷ், சங்கர், தரணிவேல் ஆகிய 3 பேரும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தனர். மேலும், சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், கள்ளச்சாராய வியாபாரி அமரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்த நிலையில் எக்கியார் குப்பத்தை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளர். கள்ளசாராயத்தை ஒழிக்க தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தேடுதல் வேட்டையில் ஈடுபட போலீசாருக்கு டிஜிபி உத்தரவு பிறப்பித்தார். மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குறித்து 11 பேர் உயிரிழந்ததை அடுத்து டிஜிபி நடவடிக்கை மேற்கொண்டார்.

இந்த நிலையில், கள்ளச்சாராயம் குடித்து ஆபத்தான நிலையில் நேற்று விழுப்புரம் முண்டியம்பாக்கம், திண்டிவனம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜ மூர்த்தி, மலர்விழி, மன்னாங்கட்டி என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், கள்ளச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. இதை தொடர்ந்து இன்று காலை சிகிச்சையில் இருந்த விஜயன்,கேசவ வேலு, சங்கர் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனால், கள்ளச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளர் அருள் வடிவழகன், உதவி ஆய்வாளர்கள் தீபன்,சீனுவாசன், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் மரியா, உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 33 பேரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து அளிக்கப்படும் சிகிச்சை குறித்து முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோருக்கு உயர் சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் உடன் அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோரும் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

The post விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளசாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Villupuram district ,Chief Minister ,M.K.Stalin ,Villupuram ,Marakanam ,Mundyambakkam government ,
× RELATED சட்டவிரோத குவாரி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ?: ஐகோர்ட் கிளை கேள்வி