×

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மீண்டும் பயன்பாட்டிற்கு வருமா தண்ணியக்க நீர்த்தேக்க தொட்டி

*முத்துப்பேட்டை பகுதி பொதுமக்கள் வலியுறுத்தல்

முத்துப்பேட்டை : குடிநீர் தட்டுப்பாட்டை போக்க பேட்டை பகுதி தண்ணியக்க நீர்த்தேக்க தொட்டியை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.முத்துப்பேட்டை நகரத்தில் ஒரு காலத்தில் சுமார் 15 அடி ஆழத்தில் நல்ல தண்ணீர் கிடைத்த காலம் போய், தற்போது பூமிக்கு 50 அடியில், உப்பு தண்ணீர் கூட கிடைக்க வாய்ப்பு இல்லாமல் பல பகுதி உள்ளது. முத்துப்பேட்டை நகரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும் தற்போது, முத்துப்பேட்டைக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து குடிநீர் விநியோகிக்கபட்டாலும், அதிலும் வரும் வழியில் குளறுபடி அடிக்கடி ஏற்படுவதால், இந்த குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமாகவும் உள்ளது.

இந்நிலையில் முத்துப்பேட்டை பேரூராட்சி சார்பில் தெற்குகாடு, செம்படவன்காடு, மருதங்காவெளி ஆகிய 3 பகுதிகளில் ஆழ்குழாய் கிணறு மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கடந்த 2013-14ம் ஆண்டில் பயனுக்கு வந்தது. வறட்சி நிவாரண திட்ட நிதியில் தலா ரூ.6 லட்சம் வீதம் மூன்றுக்கும் மொத்தம் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு, அப்போதைக்கு பயனுக்கு வந்த 3 கட்டடத்திலும் பிளாஸ்டிக் டேங்க், பில்டர் மற்றும் மின்மோட்டார்கள் இணைக்கப்பட்டுள்ளன. அருகிலேயே போர்வெல்லும் அமைக்கபட்டுள்ளது. அதிலிருந்து தண்ணீரை உறிஞ்சி சுத்திகரித்து குழாய் மூலம் பொதுமக்களுக்கு வழங்கிட ஏற்பாடு செய்யபட்டது.

அதன் பின்னர், சமீபத்தில் தெற்குக்காடு மாரியம்மன் கோயில் அருகே, அதே பகுதியில் குடியிருப்புகள் அதிகளவில் உள்ள பகுதி, பேட்டை அங்காளம்மன் கோயில் அருகே, குத்பா பள்ளி வாசல் எதிர்புறம் அதேபோல் பேட்டை மகிழம்பூ மரம் அருகே, பேட்டை காமெண்டியடி அருகே ஆகிய இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் தலா ரூ.11 லட்சத்தில் கட்டி திறக்கப்பட்டது. இதனால் ஓரளவு குடிநீர் பிரச்னையை தீர்த்து இருந்தாலும், முன்பு பயன்பாட்டில் இருந்த குடிநீர் தேக்க தொட்டிகளையும் சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என அந்தந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதன் வகையில் குறிப்பாக பேரூராட்சி 17-வது வார்டு பேட்டை பகுதியில் உள்ள தாமரைக்குளம் அருகே தண்ணியக்க நீர் தொட்டி என்னும் குடிநீர் டேங்க் ஒன்று 1969ம் ஆண்டு அப்போது பேரூராட்சி தலைவராக இருந்த சண்முகத்தேவர் முயற்சியில் கட்டப்பட்டு, அப்போது எம்எல்ஏவாக இருந்த தருமலிங்கம் தலைமையில் ஆர்டிஓ கிருஷ்ணன் என்பவரால் திறக்கப்பட்டது. இதில் குளம் அருகே பெரியளவில் கிணறு அமைக்கப்பட்டு, அதன் அருகே இரும்பால் செய்யப்பட்ட பெரியளவிலான டேங்க் அமைத்து மோட்டார் பொருத்திய குடிநீர் விநியோக டேங்க் அமைத்து அப்பகுதி மட்டுமின்றி சுற்று பகுதி மக்களுக்கும் குடிநீர் இங்கிருந்து வழங்கப்பட்டது. இதன் மூலம் இப்பகுதி மக்கள் பெருமளவில் பயனடைந்து பல ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்தது. ஆனால் தற்போது பயனில்லை.

தற்போது இப்பகுதியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டாலும் இங்கு குடிநீர் தட்டுப்பாடு அதிகளவில் உள்ளது. அதனால் நல்ல நிலையில் உள்ள இந்த பழமையான குடிநீர் டேங்கை மீண்டும் சீரமைத்தும், பயனற்று கிடக்கும் கிணறை சுத்தம் செய்து தூர் வாரியும், மீண்டும் குடிநீர் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

The post குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மீண்டும் பயன்பாட்டிற்கு வருமா தண்ணியக்க நீர்த்தேக்க தொட்டி appeared first on Dinakaran.

Tags : Thiruppattu ,
× RELATED முத்துப்பேட்டையில் பைக் மோதி பெயிண்டர் பலி