×

திருட முயன்றதாக சந்தேகம்; பீகார் மாநில தொழிலாளி சரமாரி அடித்துக் கொலை: 8 பேர் கும்பல் வெறிச்செயல்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரம் அருகே வீட்டுக்குள் நுழைந்து திருட முயற்சித்ததாக சந்தேகம் ஏற்பட்டதால் பீகார் மாநில தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் மாஞ்சி (36). கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள கொண்டோட்டி பகுதியில் ஒரு கோழித் தீவன குடோனில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு அந்த பகுதியைச் சேர்ந்த முகமது அப்சல் என்பவரது வீட்டின் முன்பு சந்தேகத்திற்கிடமான முறையில் ராஜேஷ் மாஞ்சி நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து அறிந்ததும் முகம்மது அப்சல் உள்பட அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் ராஜேஷ் மாஞ்சியை பிடித்து சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் கொண்டோட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாலிபரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜேஷ் மாஞ்சி பரிதாபமாக இறந்தார். அதைத்தொடர்ந்து மருத்துவமனையில் நடத்திய பரிசோதனையில் வாலிபரின் உடல் முழுவதும் பலத்த காயங்கள் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் தான் ராஜேஷ் மாஞ்சியை முகம்மது அப்சல் உள்பட 8 பேர் சேர்ந்து கொடூரமாக தாக்கியது தெரியவந்தது.

இதையடுத்து முகம்மது அப்சல், பாசில், சபருதீன், மெகபூப், அப்துல் சமது, நாசர், ஹபீப் மற்றும் அயூப் ஆகிய 8 பேரை கொண்டோட்டி போலீசார் கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு அவர்களை போலீசார் மலப்புரம் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post திருட முயன்றதாக சந்தேகம்; பீகார் மாநில தொழிலாளி சரமாரி அடித்துக் கொலை: 8 பேர் கும்பல் வெறிச்செயல் appeared first on Dinakaran.

Tags : Bihar ,Thiruvananthapuram ,Malappuram ,Kerala ,
× RELATED அரசு வேல கிடச்சா ஒடனே கிட்னாவா…....