×

வண்டலூர் அருகே புதிய பேருந்து நிலையத்தில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு: அதிகாரிகளுடன் ஆலோசனை

கூடுவாஞ்சேரி: வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் நவீன புறநகர் பேருந்து நிலையத்தில் இன்று காலை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது, புதிய பாலம் அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சென்னை-திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், அங்கிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகளை இயக்கவும் கடந்த 2019ம் ஆண்டு, செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் சுமார் 59.86 ஏக்கர் பரப்பளவில் ₹393.74 கோடி மதிப்பில் புதிய நவீன பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் துவங்கின.

பின்னர் திமுக ஆட்சி அமைந்ததும், இப்பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் மூலம் முடுக்கி விடப்பட்டன. இப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் தலைவருமான பி.கே.சேகர்பாபு அடிக்கடி ஆய்வு பணிகளை மேற்கொண்டு கட்டுமானப் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார். இதைத் தொடர்ந்து, கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையத்தை வரும் ஜூன் மாதம் தமிழக முதல்வர் திறந்து வைப்பார் என தகவல்கள் வெளியாகியது. கிளாம்பாக்கத்தில் நவீன முறையில் 6 லட்சத்து 40 ஆயிரம் சதுர அடியில், 2 அடித்தளம் மற்றும் தரைத்தளம், முதல் தளம் கொண்ட புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

இங்கு அனைத்து புறநகர் பேருந்துகள் மற்றும் வெளியூர் செல்லும் அரசு பேருந்துகள் நிற்கும் வகையில் நடைமேடைகள், உயர்கோபுர மின்விளக்குகள், உள்பட பல்வேறு கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று, இறுதிக்கட்ட பணிகளும் முடியும் நிலையில் தறுவாயில் உள்ளன. இந்நிலையில், கிளாம்பாக்கம் புதிய நவீன பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் இறுதிக்கட்ட பணிகளை இன்று காலை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின்போது, நவீன பேருந்து நிலையத்தை சுற்றிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க, அனைத்து வாகனங்களும் எளிதாக கடந்து செல்லும் வகையில் புதிய மேம்பாலங்கள் அமைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அமைச்சர் சேகர்பாபு ஆலோசைன நடத்தினார்.

பின்னர் அங்கு நடைபெறும் இறுதிக்கட்ட பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வில வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் அபூர்வா, சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர், செயலர் அன்சுல் மிஸ்ரா, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், ஊரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி கார்த்தி மற்றும் நெடுஞ்சாலை துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post வண்டலூர் அருகே புதிய பேருந்து நிலையத்தில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு: அதிகாரிகளுடன் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Minister ,SekarBabu ,Vandalur ,Kooduwancheri ,P. K.K. Segarbabu ,SegarBabu ,Dinakaran ,
× RELATED வண்டலூர் உயிரியல் பூங்கா 9ம் தேதி திறந்திருக்கும்