×

726 வகை ரோஜாக்கள், வண்ண மலர்களுடன் பிரமாண்ட மலர் கண்காட்சிக்கு பிரையண்ட் பூங்கா தயாராகுது

*தோட்டக்கலைத்துறையினர் தீவிர ஏற்பாடு

கொடைக்கானல் : கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் சுற்றுலாப்பயணிகளின் கண்களை கவரும் வகையில் மே 26 முதல் 28 வரை 60வது மலர் கண்காட்சி விழா நடைபெற உள்ளது. இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை தோட்டக்கலைத்துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடை சீசனை முன்னிட்டு மே 26ம் தேதி மலர் கண்காட்சியுடன் கோடை விழா துவங்குகிறது. பிரையண்ட் பூங்காவில் நடைபெறும் 60வது மலர் கண்காட்சி 28ம் தேதி வரை நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை தோட்டக்கலைத்துறை சிறப்பாக செய்து வருகிறது. வழக்கமாக இரண்டு தினங்கள் மட்டுமே நடைபெறும் மலர் கண்காட்சி இந்த ஆண்டு 3 நாட்கள் நடைபெற உள்ளன.

மலர் கண்காட்சி விழாவிற்காகவே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20 ஏக்கர் பரப்பளவுள்ள பிரையண்ட் பூங்காவில் முதற்கட்ட மலர் நாற்றுக்கள் நடும் பணிகள் நடந்தன. ஜனவரி மாதத்தில் இரண்டாம் கட்ட மலர் நாற்றுக்கள் நடப்பட்டன. அப்போது கொல்கத்தாவில் இருந்து வரவழைக்கப்பட்ட 5 ஆயிரம் வீரிய ஒட்டுரக டேலியா நாற்றுக்களும் நடப்பட்டன.பிப்ரவரி மாதத்தில் நடந்த மூன்றாம் கட்ட மலர் நாற்றுகள் நடவில் நெதர்லாந்து நாட்டு லில்லியம் மலர்கள் ஐந்து வண்ணங்களில் பூக்கும் விதமாக நடப்பட்டன. இதன்படி சுமார் ஒன்றரை லட்சம் புதிய மலர் நாற்றுக்கள் மூன்று கட்டங்களாக நடப்பட்டுள்ளன. இந்த பூக்கள் அனைத்தும் தற்போது பூக்கத் தொடங்கியுள்ளன. இதில் டேலியா மலர்கள் 10 வண்ணங்களில் பூத்துக் குலுங்குகின்றன. வரும் வாரத்தில் சுமார் ஒரு கோடி மலர்கள் பூத்துக் குலுங்கும்.

அத்துடன், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 726 வகை ரோஜா மலர்களும் உள்ளன. பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் 2,500 தொட்டிகளில் பலவண்ண மற்றும் பல வகை மலர்கள் வைக்கப்பட்டுள்ளன.கடந்த ஆண்டு மலர் கண்காட்சி விழாவில் காட்சி அரங்கத்தில் சுமார் 300 வகையான மலர்கள் கொத்துக்களாக சேகரிக்கப்பட்டு சுற்றுலாப்பயணிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டு இருந்தன. இதன்படி ஜெர்பரா, கார்னேசன், கிரை சாந்திமம், லில்லியம், காலாண்டு லா, ரோஜா, ஜமைக்கா, ஆந்தூரியம், பாம் லீவ்ஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான கண்களை பறிக்கும் அளவிலான வண்ணங்களில் மலர் கொத்துக்கள் சேகரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. இந்த ஆண்டு கூடுதலான மலர் கொத்துக்கள் சேகரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட உள்ளன.

மலர் கண்காட்சி விழாவை முன்னிட்டு தோட்டக்கலைத்துறை பல்வேறு போட்டிகளையும் நடத்துகிறது. சிறந்த மலர் தோட்டங்கள், சிறந்த காய்கறி தோட்டங்கள், சிறந்த பழ தோட்டங்கள் ஆகியவற்றை பராமரிப்பதற்காகவே பரிசுகள் வழங்கப்படும். தோட்டங்களை பராமரிப்பவர்கள் தோட்டக்கலைத் துறையில் தங்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும்.
தற்போது வரை 26 தோட்டங்களுக்கான முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி போட்டியில் பதிவு செய்துள்ளோரின் தோட்டங்களை, தோட்டக்கலைத்துறை குழுவினர் நேரடியாக பார்வையிட்டு சிறந்த முறையில் பராமரிப்பவர்களை தேர்வு செய்து பரிசுகள் வழங்கப்படும்.

அதேபோல பிரையண்ட் பூங்காவில் 37 காட்சி அரங்கங்கள் அமைப்பதற்குரிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு பல லட்சம் கார்னேசன் மலர்களை பயன்படுத்தி நான்கு மலர் உருவங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டு கூடுதலான மலர் உருவங்கள் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அத்துடன், காய்கறிகளிலும் பல உருவங்கள் அமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை பிரையண்ட் பூங்கா மேலாளர் சிவபாலன் தெரிவித்துள்ளார்.

The post 726 வகை ரோஜாக்கள், வண்ண மலர்களுடன் பிரமாண்ட மலர் கண்காட்சிக்கு பிரையண்ட் பூங்கா தயாராகுது appeared first on Dinakaran.

Tags : Bryant Park ,Kodaikanal ,
× RELATED கோடை கொண்டாட்டத்துக்கு பிரையண்ட்...