×

வேடசந்தூர் அருகே ஆர்டிஓ அலுவலக பகுதியில் செல்போன் டவர் தேவை பொதுமக்கள் கோரிக்கை

 

வேடசந்தூர்: வேடசந்தூர் அருகே உள்ள தட்டாரப்பட்டி ஊராட்சி வெள்ளனம்பட்டி கிராமத்தில் சுமார் 1000 பேருக்கு மேல் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், வேளாண்மை அலுவலகம், சத்துணவு. ஊட்டச்சத்து மையம், தீயணைப்பு நிலையம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் அரசு மாணவர் விடுதி, காவலர் குடியிருப்பு, தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பு உள்ளிட்டவை அமைந்துள்ளன. இப்பகுதியில், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கடந்து வேளாண்மை அலுவலகம் அருகில் சென்றால் எந்த நிறுவனத்தின் செல்போன்களுக்கும் சிக்னல் கிடைப்பதில்லை. இதனால் அரசு அலுவலகங்களுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் பயனாளிகள், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் என அனைவரும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

இவர்கள் அங்கிருந்து சுமார் ஒரு கி.மீ தூரத்தை கடந்து சென்றால் மட்டுமே செல்போன்களுக்கு சிக்னல் கிடைக்கும் நிலை உள்ளது. இதில் தீயணைப்பு நிலையம் அருகில் சென்றால் எந்த செல்போன்களும் முழுமையாக டவர் கிடைக்காத நிலை உள்ளது. இதனால் அவசர தேவைகளுக்கு செல்போன்களை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். விபத்து நடந்தால் அவசர உதவிக்கு அழைக்க வேண்டிய 108 ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களை தொடர்பு கொள்ள முடியாமல் பொதுமக்கள் தவிக்கின்றனர். எனவே தீயணைப்பு நிலையம் அல்லது வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் செல்போன் இணைப்பு கிடைக்கும் வகையில் டவர்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இதன் சுற்றுப்பகுதியில் உள்ள செல்போன் டவர்களின் திறனை அதிகரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

The post வேடசந்தூர் அருகே ஆர்டிஓ அலுவலக பகுதியில் செல்போன் டவர் தேவை பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : RTO ,Vedasandur ,Vellanampatty ,Thattarapatti panchayat ,Dinakaran ,
× RELATED வேடசந்தூர் அருகே பட்டாசுகள் ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது