×

கொரோனா தடுப்பூசியால் பெற்ற நோய் எதிர்ப்பு சக்தியை விரைவில் இழக்கும் உடல் பருமனானவர்கள்: புதிய ஆய்வில் தகவல்

கேம்பிரிட்ஜ்: கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதில், தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா தடுப்பூசிகள் மிகவும் பயனுள்ளவையாக உள்ளன. ஆனாலும், வயதானவர்கள், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள், புற்றுநோய் உள்ளிட்ட நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் பெரிய அளவில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியாது. தற்போது இந்த வரிசையில் உடல் பருமன் உள்ளவர்களும் இணைந்திருப்பதாக புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் அஜிஸ் ஷேக் தலைமையிலான ஆய்வாளர்கள், ஸ்காட்லாந்தின் 54 லட்சம் பேரின் சுகாதார அறிக்கைகள் கொண்டு ஆய்வு நடத்தினர்.

இதில், அதிக உடல் பருமன் கொண்டவர்கள் கொரோனா பாதிப்பு மற்றும் இறப்புக்கான வாய்ப்பு 76 சதவீதம் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சராசரியான உடல் எடை கொண்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய 20 வாரங்களுக்கு பிறகு நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்கும் நிலையில், உடல் பருமன் உள்ளவர்களுக்கு 10 வாரத்திலேயே நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்குவதாக ஆய்வாளர்கள் கூறி உள்ளனர். மேலும் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்டாலும், உடல் பருமன் உள்ளவர்கள் தடுப்பூசியால் பெற்ற நோய் எதிர்ப்பு சக்தியை வேகமாக இழப்பதாகவும் ஆய்வில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. எனவே, கடுமையான கொரோனா பாதிப்பிலிருந்து உடல் பருமன் கொண்டவர்கள் உள்ளிட்ட பாதிக்கப்படக் கூடியவர்களை பாதுகாக்க பூஸ்டர் டோஸ் செலுத்துதலை அதிகரிக்க வேண்டுமென ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.

The post கொரோனா தடுப்பூசியால் பெற்ற நோய் எதிர்ப்பு சக்தியை விரைவில் இழக்கும் உடல் பருமனானவர்கள்: புதிய ஆய்வில் தகவல் appeared first on Dinakaran.

Tags : Cambridge ,Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...