×

பறிபோனது தென்னகம்; பரிதவிக்கும் பாஜ ம.பி., ராஜஸ்தான், சட்டீஸ்கர் தேர்தலுக்கு காங்கிரஸ் புதிய வியூகம்: 2024 மக்களவை தேர்தலுக்கு தயாராகிறது

புதுடெல்லி: கர்நாடகா தேர்தல் வெற்றியின் மூலம் 4வது மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் உற்சாகத்தில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மற்றும் மக்களவை தேர்தலுக்கு காங்கிரஸ் புதிய வியூகம் வகுத்து வருகிறது. கர்நாடகா மாநில சட்டமன்றத் தேர்தல் வெற்றியினால் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் மாநிலங்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கரில் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. ஆனால் இந்தாண்டின் தொடக்கத்தில் இமாச்சல், நாகலாந்து, திரிபுரா, மேகாலயாவில் தேர்தல் நடந்தது. இதில் இமாச்சலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. தற்போது கர்நாடகா தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் கிடைத்திருக்கும் வெற்றியின் மூலம் காங்கிரஸ் 4வது மாநிலத்தில் ஆட்சி அமைக்கிறது. தேசிய அளவில் ஆளும் பாஜ.வை எதிர்கொள்ளும் ஒரே கட்சியாக காங்கிரஸ் மட்டுமே இருக்கிறது என்பது தெளிவாகி உள்ளது.

எனவே, எதிர்க்கட்சி தலைவர்களான நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், சரத் பவார், உத்தவ் தாக்கரே ஆகியோர் காங்கிரஸ் தலைமையில் இணைந்து தேர்தலை எதிர்கொண்டால் பாஜ.வுக்கு கடும் நெருக்கடி கொடுக்க முடியும், என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். கர்நாடகா தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், தெலங்கானா, மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதில், 40 தொகுதிகள் கொண்ட வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரத்தின் சட்டமன்ற பதவிக்காலம் டிசம்பர் மாதத்துடன் நிறைவடைய இருப்பதால் அங்கு இந்தாண்டு டிசம்பர் அல்லது 2024ம் ஆண்டு ஜனவரியில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. சட்டீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தின் சட்டமன்ற பதவிக்காலம் முறையே அடுத்தாண்டு ஜனவரி 3 மற்றும் 6 தேதிகளில் முடிவடைகிறது. அதே போல், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா மாநிலங்களின் சட்டமன்ற பதவிக்காலம் அடுத்தாண்டு ஜனவரி 14 மற்றும் 16 தேதிகளில் முடிகிறது.

அதேபோல், ஆந்திரா, அருணாச்சல், ஒடிசா ஆகிய மாநிலங்களின் சட்டமன்ற பதவிக்காலம் அடுத்தாண்டு ஜூன் மாதம் வெவ்வேறு தேதிகளில் முடிவடைய உள்ளது. மக்களவை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படுவது வழக்கமாகும். இதனால் மேற்கூறிய 3 மாநிலங்களுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்படுமா என்பதை கூற முடியாது.இதற்கான புதிய வியூகம் வகுப்பதில் காங்கிரஸ் தற்போதே களம் இறங்கி உள்ளது. கர்நாடகா தேர்தலை காங்கிரசார் தெளிவாக திட்டமிட்டு சந்தித்தனர்.
பாஜ ஆட்சியின் 40 சதவீத ஊழல் குறித்து விரிவாக பிரசாரம் செய்தனர். அத்தோடு, தேர்தல் வாக்குறுதிகள் பெண்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தன. 5 முக்கிய வாக்குறுதிகளை அச்சிட்டு வீடு வீடாக காங்கிரசார் கொண்டு போய் சேர்த்தனர். இதே போன்ற யுக்தியை அடுத்தடுத்து நடைபெற உள்ள மாநில சட்டப்பேரவை தேர்தல்களிலும், பின்னர் 2024 மக்களவை தேர்தலிலும் பயன்படுத்தி பாஜவை கலங்கடிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கவும் தனி திட்டம் தீட்ட காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது.

அதே நேரம், தெற்கை பறிகொடுத்து, பரிதவிக்கும் பாஜவின் நிலைமை மோசம்தான். கர்நாடகாவில் காங்கிரஸ் பெற்ற வெற்றி, பாஜ தோற்கடிக்கக் கூடிய கட்சிதான். அதிலும் பிரதமர் மோடியே நேரில் வந்து தெருதெருவாக பிரசாரம் செய்தாலும் தோல்வி கண்ட பாஜவை எப்படியும் வென்றுவிடலாம் என்ற நம்பிக்கை எதிர்க்கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பாஜவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அணி திரளும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. இது பாஜ தலைமைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2014ம் ஆண்டு முதல் நடந்து வந்த சட்டப்பேரவை மற்றும் தேசிய தேர்தல்களில் பிரதமர் மோடியை மட்டுமே நம்பியிருந்த பாஜ.வுக்கு இனிமேல் மோடி மேஜிக் கைக்கொடுக்குமா என்பது சந்தேகமே. டெல்லி, பஞ்சாப், மேற்கு வங்கம் போன்று, கர்நாடகாவிலும் மோடியின் பிரசாரம் எடுபடவில்லை என்பதையே கர்நாடகா தேர்தல் முடிவு காட்டுகிறது. பாஜ அல்லாத தென் மாநிலங்கள் தவிர, டெல்லி, பஞ்சாப், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் பாஜ ஆட்சி அகற்றப்பட்ட நிலையில், அடுத்தாண்டு நடைபெறும் மக்களவை தேர்தல் பாஜ.வுக்கு பெரும் சவாலாக அமையும்.

The post பறிபோனது தென்னகம்; பரிதவிக்கும் பாஜ ம.பி., ராஜஸ்தான், சட்டீஸ்கர் தேர்தலுக்கு காங்கிரஸ் புதிய வியூகம்: 2024 மக்களவை தேர்தலுக்கு தயாராகிறது appeared first on Dinakaran.

Tags : BJP ,Congress ,Rajasthan ,Chhattisgarh ,Lok Sabha Elections ,New Delhi ,Madhya Pradesh ,2024 Lok Sabha elections ,
× RELATED ராஜஸ்தானில் கெலாட் அரசுக்கு சிக்கல்...