- நெல்லை பொருநை அருங்காட்சியகம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- நெல்லை
- Tamiraparani
- மேற்குத்தொடர்ச்சி
- தூத்துக்குடி
- புன்னக்காயல்
நெல்லை: தாமிரபரணி ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 130 கிமீ தூரம் பாய்ந்து புன்னக்காயலில் கடலில் கலக்கிறது. வற்றாத ஜீவநதி என்ற பெயரும் தாமிரபரணி ஆற்றுக்கு பெருமை சேர்க்கிறது. தாமிரபரணியின் மூலம் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 40 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில 46 ஆயிரத்து 107 ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. இது மட்டுமல்லாது நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய நான்கு மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் தாமிரபரணி ஆறு உள்ளது.மனித நாகரிகம் வளர்ந்தது ஆறுகளை ஒட்டிய பகுதிகளில் தான். அதற்கு சாட்சியாக தாமிரபரணி ஆற்றங்கரை பகுதியில் அமைந்துள்ள ‘ஆதிச்சநல்லூர்’ மனித நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப்படுகிறது. இதை ஒன்றிய அரசின் தொல்லியல் துறை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளது.
ஆதிச்சநல்லூரில் நடத்திய அகழாய்வில் பண்டை கால மனிதர்கள் பயன்படுத்திய ஓடுகள், இரும்பு பொருட்கள், காதணிகள், மண்பாண்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளன. இதே போல பழங்கால இயற்கை துறைமுகமாக இருந்த கொற்கையிலும் அகழாய்வு நடத்தப்பட்டு, பழங்கால பொருட்கள் கிடைத்துள்ளன. சிவகளையில் நடத்திய அகழாய்வில் பண்டை கால மனிதர்கள் வாழ்வில் பயன்படுத்திய பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த பொருட்களை காட்சிப்படுத்தும் வகையிலும், தற்கால சமுதாயத்தினரும் பார்த்து பயன் பெறும் வகையிலும், மனித நாகரிகம் தோன்றிய இடம் ஆற்றங்கரை என்பதை பெருமைப்படுத்தும் வகையிலும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ33 கோடியில் நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவித்தார்.
இதற்காக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு, நெல்லை ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் 15 ஏக்கர் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இங்கு பொருநை அருங்காட்சியகம் அமைக்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் அடிக்கல் நாட்ட உள்ளார். இதற்கான பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இங்கு பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும் போது, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய மூன்று இடங்களிலும் அகழாய்வில் கிடைத்த பண்டை கால மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் காட்சிப்படுத்தப்படுகிறது. இதற்காக மூன்று தனித்தனி வளாகங்கள் அமைக்கப்பட உள்ளது.
சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க ஏதுவாகவும், சுற்றுலா பயணிகளுக்கு அதுகுறித்து விளக்கம் அளிக்கவும் தொல்லியல் துறை சார்பில் பணியாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர். ஏற்கெனவே நெல்லையில் பொழுதுபோக்கிற்கான அம்சங்கள் எதுவும் இல்லை என்ற குறை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. பொருநை அருங்காட்சியகம் ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் அமையும் போது சுற்றுலா பயணிகள் அனைவரும் வந்து செல்லும் இடமாகவும், சனி, ஞாயிறு கிழமைகள் மற்றும் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் அனைவரும் குடும்பத்துடன் கண்டு களிக்கும் இடமாகவும் திகழும் என நம்பப்படுகிறது.
The post பண்டை கால மனித நாகரிகத்துக்கு அடுத்த சாட்சி நெல்லையில் பொருநை அருங்காட்சியகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் அடிக்கல் appeared first on Dinakaran.