×

பரமத்திவேலூர் அருகே தொடரும் பயங்கரம் ஆலையில் தூங்கிக்கொண்டிருந்த 4 தொழிலளர்கள் உயிருடன் எரிப்பு: கூரையை பிரித்து பெட்ரோல் ஊற்றி மர்ம நபர்கள் தீவைத்த கொடூரம்

பரமத்திவேலூர் ஆலை கொட்டகையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது கூரையை பிரித்து மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் 4 பேர் உடல் கருகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே கரப்பாளையத்தில், கடந்த மார்ச் 11ம் தேதி, ஆடு மேய்க்க சென்ற பட்டதாரி இளம்பெண் நித்யா, மர்ம நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். இந்த நிலையில், உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யக் கோரியும், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரியும் அப்பகுதியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதை தொடர்ந்து, அப்பகுதியில் வசிக்கும் இரு சமூகத்தினர் இடையே தொடர்ச்சியாக வெல்ல ஆலை கொட்டகை மற்றும் வட மாநில தொழிலாளர்கள் தங்கி உள்ள குடியிருப்புகள், அதற்கு பயன்படக்கூடிய டிராக்டர்கள், வீடுகள், வாகனங்கள் ஆகியவற்றை தீ வைத்து எரிப்பது, அதற்கு பதிலடியாக மற்றொரு சமூகத்தினர் சார்ந்த ஆலை கொட்டகை மற்றும் அவர்களை சார்ந்த பல்வேறு இடங்களில் தீ வைப்பது, பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் குண்டு வீசுவது என தொடர்ச்சியாக சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த பரபரப்பான சூழலில், கடந்த இரு தினங்களுக்கு முன், ஜேடர்பாளையம் அடுத்த வடகரையாத்தூரில் உள்ள தனியார் பள்ளியில், மர்ம நபர்கள் சிலர் தீ வைத்ததில், ஒரு வாகனம் முற்றிலும் எரிந்து சேதமானது. இதன் தொடர்ச்சியாக, ஜேடர்பாளையம் அருகே பள்ளாபாளையத்தில் உள்ள 88 ஏக்கர் பரப்புள்ள ஏரியில், நேற்று முன்தினம் திடீரென ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. விஷம் கலக்கப்பட்டதால் மீன்கள் செத்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை ஜேடர்பாளையம் முத்துசாமி என்பவரது வெல்ல ஆலையில் வேலை செய்யும் வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த அறையின் கூரையில் பொருத்தப்பட்டிருந்த ஆஸ்பெட்டாஸ் சீட்டுகளை உடைத்த மர்ம நபர்கள், அங்கு தூங்கி கொண்டிருந்த 4 பேர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதில், உடல் கருகிய 4 பேரும் அலறித் துடித்தனர். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், அவர்களை மீட்டு, கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்த நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் ேநரில் சென்று விசாரணை நடத்தினார். பதற்றம் நிலவுவதால், மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில், 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஏடிஜிபி ஆலோசனை: இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஏடிஜி சங்கர் நேற்று மாலை வந்தார். சம்பவ இடத்தை பார்வையிட்ட அவர் நேற்றிரவு ஜேடர்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், மேற்கு மண்டல ஐஜி சுதாகர், கோவை சரக டிஐஜி விஜயகுமார், நாமக்கல் எஸ்.பி கலைசெல்வன், ஈரோடு எஸ்பி சக்திகணேசன் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.

* 18 பேர் கொண்ட குழு அமைப்பு

தொழிலாளர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் உட்பட 18 பேர் கொண்ட 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் வடகரையாத்தூர் கிராமத்தில் உள்ள ஆலைக்கொட்டகைகள் மற்றும் கிராம பகுதிகளை சுழற்சி முறையில், 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட உள்ளதாக, மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

* சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றம்

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே கரப்பாளையத்தில் பட்டதாரி இளம் பெண் கடந்த மார்ச்11ம் தேதி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, ஜேடர்பாளையம் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிந்து 17வயது சிறுவனை கைது செய்தனர். இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து, டிஜிபி சைலேந்திரபாபு நேற்று உத்தரவிட்டுள்ளார்.

 

The post பரமத்திவேலூர் அருகே தொடரும் பயங்கரம் ஆலையில் தூங்கிக்கொண்டிருந்த 4 தொழிலளர்கள் உயிருடன் எரிப்பு: கூரையை பிரித்து பெட்ரோல் ஊற்றி மர்ம நபர்கள் தீவைத்த கொடூரம் appeared first on Dinakaran.

Tags : Payangaram plant ,Paramathivelur ,Paramathivellur ,Dinakaran ,
× RELATED காவல்துறை சார்பில் சிறப்பு குறைதீர் முகாம்