×

விலை குறைவு என்பதால் மதுவுக்கு பதில் எரிசாராயம் குடித்த 2 பெண்கள் உள்பட 4 பேர் பலி: அதிர்ச்சியில் சித்தாமூர் மக்கள்

* போலீசார் வேட்டையில் ஒருவர் கைது

சென்னை மதுவுக்கு பதிலாக அதிக போதை தரும் எரிசாராயத்தை குடித்த 2 பெண்கள் உள்பட 4 பேர் பரிதாபமாக தங்கள் உயிரைவிட்டனர். இதற்கு காரணமான நபரை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு அடுத்த சித்தாமூர் காவல் எல்லைக்குட்பட்டது பெருக்கரணை கிராமம். இங்குள்ள இருளர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் வசந்தா(40), அவரது மகள் அஞ்சலை(22), கணவர் சின்னதம்பி(30). இவர்கள், குறைவான விலையில் கரிக்கன்தாங்கல் கிராமத்தில் எரி சாராயம் வாங்கி குடித்தனர். இந்நிலையில், வீட்டில் வசந்தா, மருமகன் சின்ன தம்பி எரிசாராயம் குடித்ததால் இறந்துவிட்டனர். அவர்களுக்கு அருகில் அஞ்சலை மட்டும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதையடுத்து, சித்தாமூர் போலீசார் இறந்த இருவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, அஞ்சாலையை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் அஞ்சலைக்கு நினைவு திரும்பியதும் அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தாங்கள், கரிக்கன்தாங்கல் பகுதியில்அமாவாசை என்பவரிடம் எரி சாராயம் வாங்கி குடித்ததாக தெரிவித்தார். இதனையடுத்து நேற்று முன்தினம் மாலை போலீசார் அமாவாசையை கைது செய்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அமாவாசையிடம் எரி சாராயம் வாங்கி குடித்த பேரம்பாக்கம் கிராமம் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த வள்ளியப்பன்(65) மற்றும் அவரது மனைவி சந்திரா (60) ஆகியோர் நேற்று காலை அவர்களது வீட்டில் இறந்துகிடந்தனர். இது குறித்து பொதுமக்கள் புகாரின் பேரில், சித்தாமூர் போலீசார் இறந்த இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இரண்டு நாட்களில், இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் இறந்ததை அறிந்து செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. சுதாகர் நேற்று அந்த கிராமங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்பகுதி மக்களிடம் சம்பவம் குறித்து
விசாரித்தார். எரிசாராயம் விற்ற அமாவாசையிடம் நேற்று முன்தினம் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் வாங்கி குடித்துள்ளனர். இறந்துபோன நால்வர் மட்டும் அதிக போதைக்காக தண்ணீரை அதிகம் கலக்காமல் குடித்துள்ளனர். இதனால் நாக்கு வறண்டு இறந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும், ஓதியூர் கிராமத்தை சேர்ந்த வேலு (53) என்பவரிடம் இருந்து எரிசாராயத்தை அமாவாசை வாங்கியதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து வேலுவை போலீசார் தேடி வருகின்றனர்.

* காவல்துறை அதிகாரிகள் 3 பேர் சஸ்பெண்ட்

செய்யூர் அடுத்த கரிசன்தாங்கல் கள்ளச்சந்தையில் மது வாங்கிக் குடித்த, வெவ்வேறு குடும்பத்தை சார்ந்த இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் மேல்மருவத்தூர் ஆய்வாளர் பிரேம் ஆனந்த், சித்தாமூர் உதவி ஆய்வாளர் மோகனசுந்தரம், அமலாக்கப் பிரிவு உதவி ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இங்கு உளவுத்துறையில் பணியாற்றும் காவல்துறையினரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

The post விலை குறைவு என்பதால் மதுவுக்கு பதில் எரிசாராயம் குடித்த 2 பெண்கள் உள்பட 4 பேர் பலி: அதிர்ச்சியில் சித்தாமூர் மக்கள் appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...