×

மோக்கா புயல் எதிரொலியால் காசிமேட்டில் மீன்வரத்து முற்றிலும் குறைந்தது: இரண்டு மடங்கு விலை உயர்வு

* அசைவ பிரியர்கள் அதிர்ச்சி

சென்னை மோக்கா புயலால் சிறிய படகுகளும் கடலுக்கு செல்லவில்லை. இதனால் காசிமேடுக்கு மீன் வரத்து நேற்று முற்றிலும் குறைந்தது. வரத்து குறைவால் 2 மடங்கு மீன் விலை உயர்ந்தது. கடல்வாழ் உயிரினங்கள் இனப்பெருக்கத்திற்காக ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மீன் பிடிக்க மத்திய அரசு ஆண்டுதோறும் தடை விதிக்கிறது. இக்காலக் கட்டத்தில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் என்பதால் மீன்வளத்தை பாதுகாக்க இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டிற்கான மீன்பிடி தடை காலம் தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் கடந்த மாதம் 15ம் தேதி தொடங்கியது. இது வருகிற ஜூன் 14ம் தேதி வரை, மொத்தம் 61 நாட்கள் அமலில் இருக்கும்.

மீன்டி தடையால் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் சுமார் 15 ஆயிரம் விசைப்படகுகள் ஆழ்கடலுக்குள் செல்லவில்லை. சிறிய வகை பைபர் படகுகளில் மட்டும் மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருகின்றனர். தடைகாலம் தொடங்கியது முதல் சென்னை காசிமேடு மீன்மார்க்கெட்டுக்கு குறைந்த அளவு மீன்களே விற்பனைக்கு வந்தன. தொடர்ந்து வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த மோக்கா புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இதனால் சிறிய வகை படகுகளும் கடலுக்குள் செல்லாததால் காசிமேடு மார்க்கெட்டுக்கு மீன் வரத்து நேற்று முற்றிலும் குறைந்தது. அது மட்டுமல்லாமல் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் மீன் வாங்க ஏராளமானோர் காலை முதலே காசிமேட்டிற்கு வந்தனர். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு மீன்கள் இல்லாததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். விலையும் 2 மடங்கு அதிகமாக இருந்தது. சிறியவகை மீன்களான நெத்திலி, நண்டு, இறால் மட்டுமே விற்பனைக்கு வந்தன.

பாறை, சங்கரா, கொடுவா, வவ்வால் மற்றும் சிறிய வகை மீன்கள் வரத்து என்பது இல்லாமல் இருந்தது. இதனால் சிறிய வகை வஞ்சிரம் கிலோ ரூ.900க்கும், பெரியவகை வஞ்சிரம் ரூ.2 ஆயிரம் வரையும் விற்கப்பட்டது. இதேபோல் கடந்த வாரத்தில் ரூ.450 வரை விற்ற நெத்திலி மீன் ரூ.600-க்கும், சங்கரா ரூ.900க்கும், இறால்-ரூ.600 வரையும், நண்டு ரூ.700 வரையும் விற்பனை ஆனது. மீன் விலை அதிகரித்த போதிலும், விலையை பொருட்படுத்தாமல் மீன்களை அசைவ பிரியர்கள் வாங்கி சென்றனர். இதுகுறித்து மீன் வியாபாரிகள் கூறுகையில், ஏற்கவே மீன் பிடி தடைகாலம் இருந்து வருகிறது. இந்த நேரத்தில் மோக்கா புயல் சின்னம் காரணமாக சிறிய படகுகளிலும் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. இதனால் காசிமேடு மார்க்கெட்டுக்கு குறைந்த அளவிலேயே மீன்களே விற்பனைக்கு வந்தன. இதன் காரணமாக மீன்விலை அதிகரித்து காணப்பட்டது”என்றார்.

The post மோக்கா புயல் எதிரொலியால் காசிமேட்டில் மீன்வரத்து முற்றிலும் குறைந்தது: இரண்டு மடங்கு விலை உயர்வு appeared first on Dinakaran.

Tags : Casimate ,Moka ,Chennai ,Moka Cyclone ,Casimadu ,Storm ,Fisheries ,Dinakaran ,
× RELATED மீன்பிடி தடைக்காலம் நாளை...