×

கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவு நாடு முழுவதும் மாற்றத்திற்கான முன் அறிவிப்பு: தலைவர்கள் கருத்து

சென்னை கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவு நாடு முழுவதும் மாற்றத்திற்கான வாக்குறுதி என்று தலைவர்கள் கூறியுள்ளனர். கனிமொழி எம்பி (திமுக துணை பொது செயலாளர்): கர்நாடக மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. இது மாநிலத்திற்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல, நாளை நாடு முழுவதும் மாற்றத்திற்கான வாக்குறுதியும் கூட. மதச்சார்பற்ற சக்திகளை நம்புபவர்களுக்கு இந்த முடிவு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக விளங்குகிறது.

* திருமாவளவன்(விசிக தலைவர்): கர்நாடகாவில் பாஜ தோற்கடிக்கப்பட்டதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவிலும் பாஜ முற்றிலும் துடைத்தெறியப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. 2024 நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கு கர்நாடக மாநில தேர்தல் முடிவுகள் முன்னறிவிப்பாக இருக்கின்றன. மீண்டும் பாஜ ஆட்சி அமைக்க முடியாது என்பது இப்போது தெளிவாகத் தெரிந்துவிட்டது.கர்நாடகாவிலிருந்து பாஜவை விரட்டியதன் மூலம் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மக்களுக்குச் சற்றே ஆறுதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் பாஜவை தூக்கிச் சுமந்து வரும் அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் இந்தத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், பாஜவுடன் கொண்டுள்ள தங்களது கூட்டணி உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது.

* கி.வீரமணி(தி.க. தலைவர்): மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தி, ஆட்சியைப் பிடித்த பாஜவுக்கு கர்நாடக மக்கள் தக்க பாடம் கற்பித்துவிட்டனர். பன்னீர்செல்வம்( ஐ.என்.டி.யு.சி பொதுச்செயலாளர்): 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு, மதவாத சக்தியான பாஜ அரசுக்கு முடிவுரை எழுதும் ஆரம்பமே கர்நாடக தேர்தலின் முடிவாகும். திராவிட மாடல் ஆட்சியை இந்தியா முழுவதும் கொண்டு செல்வேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார், அதன் வெற்றி படிக்கட்டு தான் கர்நாடக மக்களின் தீர்ப்பாகும்.

 

The post கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவு நாடு முழுவதும் மாற்றத்திற்கான முன் அறிவிப்பு: தலைவர்கள் கருத்து appeared first on Dinakaran.

Tags : Karnataka assembly election ,Chennai Karnataka assembly election ,Kanimozhi ,DMK ,Karnataka assembly ,
× RELATED தூத்துக்குடி தொகுதியில் மீண்டும்...