![]()
சென்னை: செய்தித் துறையின் நினைவகங்கள் மற்றும் தலைவர்களின் இல்லங்களை ஆய்வு செய்த தலைமை செயலாளர் இறையன்பு பொதுமக்கள் அதிகளவில் பார்வையிடும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். செய்தித் துறையின் கீழ் உள்ள சென்னை காந்தி மண்டபம் வளாகத்தில் அமைந்துள்ள ராஜாஜி நினைவிடம், காந்தி அருங்காட்சியகம் மற்றும் பொலிவூட்டப்பட்ட வ.உ.சி செக்கு, மார்பளவுச் சிலை, சுதந்திரப் போராட்ட வீரர்கள் அரங்கம், தமிழ்மொழித் தியாகிகள் அரங்கம், பெரியவர் எம்.பக்தவச்சலம் நினைவிடம், இரட்டைமலை சீனிவாசன் நினைவிடம், காமராஜர் நினைவிடம் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து ரூ.2.48 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் அயோத்திதாச பண்டிதர் நினைவு மண்டப கட்டுமான பணிகளை தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார்.
பின்னர் காமராஜர் நினைவு இல்லம், கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் மணிமண்டபம், திருவல்லிக்கேணியில் உள்ள மகாகவி பாரதியார் நினைவு இல்லம் மற்றும் ஆர்.ஏ.புரத்தில் உள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபம் ஆகியவற்றை பார்வையிட்டு அரங்கங்கள் மற்றும் மணிமண்டபங்களை பொது மக்கள் அதிகளவில் பார்வையிட்டு செல்லும் வகையில் பயன்படுத்தப்பட வேண்டுமென்று அலுவலர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளார். இந்த ஆய்வின்போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் செல்வராஜ், கூடுதல் இயக்குநர் சரவணன், இணை இயக்குநர் தமிழ்செல்வராஜன், முதன்மை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, தலைமை பொறியாளர் ஆயத்தரசு ராஜசேகரன், செயற்பொறியாளர் ஜெயக்கர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
The post செய்தித்துறையின் நினைவகங்கள், தலைவர்களின் இல்லங்கள் ஆய்வு பொதுமக்கள் அதிகளவில் பார்வையிட நடவடிக்கை: அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் இறையன்பு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

