×

தாய்லாந்து நாடாளுமன்ற தேர்தல் 5 கோடி பேர் வாக்களிப்பு

பாங்காக்: தாய்லாந்து நாடாளுமன்றத்துக்கு நேற்று நடந்த தேர்தலில் 5 கோடி பேர் ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இந்த தேர்தலில் எதிர்க்கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கிறது.தாய்லாந்து நாட்டில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கடந்த 2014ம் ஆண்டு ராணுவம் கவிழ்த்தது. தொடர்ந்து ராணுவ தளபதி பிரயுத் சன் ஓச்சா தாய்லாந்து பிரதமராக பதவியேற்றார். தவறான பொருளாதார நிர்வாகம், ஊழல் ஆட்சி, கொரோனாவை கையாள்வதில் தோல்வி என பல்வேறு குற்றச்சாட்டுகள் பிரயுத் சன் ஓச்சா மீது எழுந்ததையடுத்து, அவர் மீது பலமுறை நம்பிக்கையில்லா தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால் அனைத்திலும் அவர் வெற்றி பெற்று பிரதமராக நீடித்து வருகிறார்.

தாய்லாந்து நாடாளுமன்றத்தை கடந்த மார்ச் 21ம் தேதி பிரதமர் பிரயுத் சன் ஓச்சா கலைத்தார். இதையடுத்து நேற்று தேர்தல் நடந்தது. 5 கோடிக்கும் அதிகமான மக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். அவர்களில் 30 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் முதன்முறையாக வாக்குகளை பதிவு செய்தனர். இந்த தேர்தலில் ராணுவ தொடர்புடைய கன்சர்வேடிவ் கட்சிக்கு எதிராக ஜனநாயக கட்சிகள் ஒன்றிணைந்து களமிறங்கியுள்ளன. இந்த தேர்தலில் மீண்டும் போட்டியிடும் பிரயுத்தை எதிர்த்து முன்னாள் பிரதமர் தக்க்ஷின் ஷினவத்ராவின் மகள் பெடோங்டர்ன் ஷினவத்ரா போட்டியிடுகிறார். தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் பெடோங்டர்ன் ஷினவத்ராவுக்கு ஆதரவாக வௌிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

The post தாய்லாந்து நாடாளுமன்ற தேர்தல் 5 கோடி பேர் வாக்களிப்பு appeared first on Dinakaran.

Tags : Thai parliamentary election ,Bangkok ,Thai Parliament ,Thailand Parliamentary Election ,Dinakaran ,
× RELATED தாய்லாந்தில் ஒரே பாலின...