×

கர்நாடக முதல்வர் யார்? சித்தராமையா, சிவக்குமார் இடையே போட்டி: காங். எம்எல்ஏக்களிடம் மேலிட பார்வையாளர்கள் கருத்துக்கேட்பு

* அகில இந்திய காங்கிரஸ் தலைவர் இறுதி முடிவெடுக்க தீர்மானம்

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், முதல்வர் பதவிக்கு முன்னாள் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் இடையே போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் மேலிட பார்வையாளர்கள் 2 மணி நேரம் கருத்துகளை கேட்டறிந்தனர். இந்த விவகாரத்தில் இறுதி முடிவெடுக்க அகில இந்திய காங்கிரஸ் தலைவருக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. ஆளும் பாஜவால் 66 தொகுதிகளை மட்டுமே பெற முடிந்தது. இதைத்தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் அடுத்த முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முதல்வர் பதவிக்கான போட்டியில் காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமையா இருக்கிறார்கள். இருவரின் ஆதரவாளர்களும் போஸ்டர் ஒட்டி தங்கள் விருப்பத்தை தெரியப்படுத்தி வருகின்றனர். இதனால் இரு தலைவர்களுக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக சித்தரிக்கப்பட்டன. ஆனால் தனக்கும், சித்தராமையாவுக்கும் இடையே எந்த வித கருத்து வேறுபாடும் கிடையாது என்று டி.கே.சிவகுமார் திட்டவட்டமாக தெரிவித்தார். அதே சமயம் ஒக்கலிக மடாதிபதிகள் அனைவரும் கூடி, டி.கே.சிவகுமாரை முதல்வராக கட்சி தலைமை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையடுத்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே புதியதாக தேர்வு செய்யப்பட்ட கர்நாடக எம்எல்ஏக்களிடம் அடுத்த முதல்வர் குறித்து கருத்து கேட்க மேலிட பார்வையாளர்கள் குழுவை நியமித்தார். இதில் மூத்த தலைவர் சுஷில் குமார் ஷிண்டே, பொது செயலாளர் ஜிதேந்திர சிங், தீபக் பாபதியா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இவர்கள் நேற்று மாலை பெங்களூரு வந்தனர். கர்நாடக காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தை தனியார் ஓட்டலில் இரவு 7 மணிக்கு கூட்டினர். இதில் சித்தராமையா, டி.கே.சிவகுமார் உள்பட 135 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கலந்துகொண்டனர். மேலும் ஹூப்பள்ளி தார்வார் மத்திய தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஜெகதீஷ் ஷெட்டரும் பங்கேற்றார். இந்த கூட்டம் இரண்டு மணி நேரம் நடைபெற்றது. முன்னதாக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டி.கே.சிவகுமார் வந்த போது அங்கே திரண்டு நின்றிருந்த தொண்டர்கள் அடுத்த முதல்வர் என கூறி உற்சாகமாக குரல் எழுப்பினர். அது போல் சித்தராமையா வந்தபோது அடுத்த முதல்வர் என அவரது ஆதரவாளர்கள் கோஷமிட்டனர். கூட்டத்தில் அடுத்த முதல்வராக யாரை தேர்வு செய்யலாம் என எம்எல்ஏக்களிடம் மேலிட பார்வையாளர்கள் மூவரும் 2 மணி நேரத்துக்கு மேல் கருத்து கேட்டனர்.

இறுதியில் கர்நாடகாவின் புதிய முதல்வரை தேர்வு செய்யும் அதிகாரத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேக்கு வழங்கி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எம்எல்ஏக்கள் தெரிவித்த கருத்தை அறிக்கையாக தயாரித்து காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவுக்கு மேலிட பார்வையாளர்கள் அனுப்ப உள்ளனர். இந்த அறிக்கையின் பேரில் மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதை தேசிய தலைவர் மல்லிகார்ஜூன்கார்கே இறுதி முடிவெடுத்து அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. எம்எல்ஏக்கள் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா ஆகிய இரண்டு பேருக்கும் ஆதரவு கிடைத்துள்ளது அத்துடன் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவரும் முன்னாள் துணை தலைவருமான பரமேஸ்வருக்கு முதல்வர் பதவி தரவேண்டும் என்றும் எம்எல்ஏக்களில் ஒரு பிரிவினர் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

* சித்தராமையாவுக்கு வாய்ப்பு

தனியார் ஓட்டலில் நடந்த கூட்டத்தில் மேலிட பொறுப்பாளர் ரனதீப்சிங் சுர்ஜேவாலா, தேசிய செயலாளர் வேணுகோபால் தனித்தனியாக டிகேசிவகுமார், சித்தராமையா உடன் ஆலோசனை நடத்தினர். நாடாளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடைபெறுவதால் முதல்வர் பதவி சித்தராமையாவுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம், நாடாளுமன்ற தேர்தலில் இதே போன்று வெற்றி பெற டி.கே.சிவகுமாரின் பணி முக்கியமாக உள்ளது என்று மேலிட தலைவர்கள் கருதுகின்றனர். அத்துடன் மாநில தலைவர் பதவியில் டி.கே.சிவகுமார் இருக்கிறார் எனவே, முதல்வர் பதவியில் சித்தராமையா நியமிக்கப்படலாம் என்பது பெரும்பான்மையான எம்எல்ஏக்களின் கருத்தாகும்.

* டெல்லி வர மேலிடம் அழைப்பு சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் இரண்டு பேரையும் டெல்லி வருமாறு மல்லிகார்ஜூனகார்கே அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

The post கர்நாடக முதல்வர் யார்? சித்தராமையா, சிவக்குமார் இடையே போட்டி: காங். எம்எல்ஏக்களிடம் மேலிட பார்வையாளர்கள் கருத்துக்கேட்பு appeared first on Dinakaran.

Tags : Chief of ,Karnataka ,Sidaramaiah ,Shivakumar ,Kong ,All India Congress ,Bengaluru ,Congress Amoka ,Dinakaran ,
× RELATED கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட்...