×

சமூக ஆர்வலர் கொலை சம்பவம்; என்சிபி எம்எல்ஏ மீது கொலை வழக்கு: நகராட்சி மாஜி பெண் தலைவர் பரபரப்பு புகார்

புனே: நகராட்சி மாஜி பெண் தலைவர் அளித்த புகாரின் அடிப்படையில் புனேயில் சமூக ஆர்வலர் கொலை வழக்கில் என்சிபி எம்எல்ஏ உள்ளிட்டோர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சமூக ஆர்வலரும், அரசியல்வாதியுமான கிஷோர் அவேர் என்பவர், கடந்த மார்ச் மாதம் சுங்கச்சாவடி எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தினார். அவரை நான்கு பேர் கும்பல் சுட்டுக் கொன்றது. கிஷோர் அவேரின் தாயார் சுலோச்சனா அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலையின் பின்னணியில் தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) எம்எல்ஏ சுனில் ஷெல்கே, அவரது சகோதரர் சுதாகர் மற்றும் மற்றொரு நபர் இருந்ததாக கூறப்பட்டது. அதையடுத்து மேற்கண்ட 3 பேர் மீதும் கொலை வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து பிம்ப்ரி சின்ச்வாட்டின் உதவி போலீஸ் கமிஷனர் பத்மகர் கன்வாட் கூறுகையில்:
கிஷோர் அவேர் கொலை வழக்கில், எம்எல்ஏ மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதாக பாதிக்கப்பட்டவரின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் எம்எல்ஏ உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த கொலை வழக்கில் எம்எல்ஏவின் பங்கு குறித்து விசாரணை நடந்து வருகிறது. கொலையின் பின்னணியில் எம்எல்ஏவுக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கைது உட்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதுகுறித்து நகராட்சி முன்னாள் தலைவரும், கிஷோர் அவேரின் தாயுமான சுலோச்சனா கூறுகையில்:
எனது மகன் கொலை செய்யப்படும் முன், எம்எல்ஏ ஷெல்கே, அவரது சகோதரர் மற்றும் அவர்களது ஆதரவாளர்களிடமிருந்து தனது உயிருக்கு அச்சுறுத்தல் வருவதாக என்னிடம் தெரிவித்தார். அதனால் ‘ஜன்சேவா விகாஸ் சமிதி’ என்ற அமைப்பை நடத்தி வரும் எனது மகனை கொன்றுள்ளனர் என்றார்.

இதுகுறித்து குற்றம்சாட்டப்பட்ட எம்எல்ஏ ஷெல்கே கூறுகையில்:
கிஷோர் அவேரின் கொலையை கண்டிக்கிறேன். என் மீதும், எனது சகோதரர் மீதும் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். சில விஷயங்களில் எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஆனால் இந்த கொலைக்கும் எனக்கும் சம்மந்தமில்லை என்றார்.

The post சமூக ஆர்வலர் கொலை சம்பவம்; என்சிபி எம்எல்ஏ மீது கொலை வழக்கு: நகராட்சி மாஜி பெண் தலைவர் பரபரப்பு புகார் appeared first on Dinakaran.

Tags : NCB MLA ,Maji ,Pune ,Municipal Maji ,
× RELATED கேரள மாஜி அமைச்சரை விசாரிக்க மனு அமலாக்கத்துறைக்கு ஐகோர்ட் கண்டனம்