×

திருத்துறைப்பூண்டியில் துணிகரம்; டாக்டர் வீட்டின் கதவை உடைத்து 200 பவுன் நகை கொள்ளை: மர்ம நபர்களுக்கு வலை

திருவாரூர்: திருத்துறைப்பூண்டியில் டாக்டர் வீட்டின் கதவை உடைத்து 200 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து ெசன்றனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பழைய எடத்தெருவை சேர்ந்தவர் பிரேம்குமார்(58). பிரபல குழந்தைகள் நல மருத்துவர். இவரது வீட்டின் பின்புறம் உள்ள வீதியில் இவருக்கு சொந்தமான விஜிலா மருத்துவமனை உள்ளது. இவரது ஒரே மகள் சென்னையில் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வருகிறார். இவரை பார்ப்பதற்காக பிரேம்குமார் மனைவி விஜிலாவுடன் நேற்றிரவு வீட்டை பூட்டிவிட்டு சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

இந்நிலையில் அவரது மருத்துவமனையில் வேலை பார்க்கும் செல்வி(50) என்பவர் டாக்டர் வீட்டிலும் வேலை செய்து வருகிறார். அவர் வழக்கம்போல் இன்று காலை டாக்டர் வீட்டுக்கு வேலைக்கு வந்தார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே அறையிலிருந்த பீரோக்களும் உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அவர் டாக்டர் பிரேம்குமார், அருகில் வசிக்கும் அவரது மைத்துனர் ஜான் கிறிஸ்டோபருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து ஜான் கிறிஸ்டோபர் திருத்துறைப்பூண்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். டிஎஸ்பி சோமசுந்தர், இன்ஸ்பெக்டர் கழனியப்பன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கடப்பாரையால் நெம்பி பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். இதில் 200 பவுன் நகைகள், லட்சக்கணக்கில் பணம் கொள்ளை போனதாக கூறப்படுகிறது. தகவலறிந்த டாக்டர் பிரேம்குமார் ஊருக்கு திரும்பியுள்ளார். இருப்பினும் அவர் சென்னையிலிருந்து வந்த பின்னர் தான், கொள்ளை போன பணம், நகைகளின் மதிப்பு தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

டாக்டர் ஊருக்கு சென்றது தெரிந்து, இந்த கொள்ளை சம்பவம் நள்ளிரவு நடந்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள கேமராக்களில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகியுள்ளதா என போலீசார் சோதனையிட்டு வருகின்றனர். அடுத்தடுத்து வீடுகள், கட்சி அலுவலகம் என நெருக்கடியான இந்த பகுதியில் நடந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post திருத்துறைப்பூண்டியில் துணிகரம்; டாக்டர் வீட்டின் கதவை உடைத்து 200 பவுன் நகை கொள்ளை: மர்ம நபர்களுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Tirupupundi ,Thiruvarur ,Thiruvarapundi ,Thiruvarur District ,Puddy ,
× RELATED கோடை வெப்பத்தால் வற்றிப்போன நீர் நிலைகள் தண்ணீரை தேடும் பறவைகள்