×

ஐபிஎல்.லில் இன்று 2 போட்டி; சேப்பாக்கத்தில் சிஎஸ்கே-கேகேஆர் மோதல்: ஜெய்ப்பூரில் பிற்பகல் ஆர்சிபி-ராஜஸ்தான் பலப்பரீட்சை

சென்னை: 16வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி தங்களது கடைசி லீக் போட்டியில் இன்று கொல்கொத்தா அணியுடன் இரவு 7.30 மணிக்கு மோதுகிறது. சிஎஸ்கே இந்த முறை இதுவரை சொந்த மண்ணில் 6 லீக் போட்டியில் ஆடி 4 வெற்றி, 2 தோல்வியை சந்தித்துள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் இன்றைய லீக் போட்டியை வெற்றியுடன் முடிக்க வேண்டும் என சிஎஸ்கே நினைக்கிறது. தற்போது 12 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே 15 புள்ளிகள் உடன் 2வது இடத்தில் உள்ளது. எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலே சிஎஸ்கேவுக்கு பிளே ஆப் சுற்று உறுதியாகிவிடும். இதனால் கே கே ஆர் அணிக்கு எதிரான இன்றைய போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சேப்பாக்கம் மைதானம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானம் ஆகும். சிஎஸ்கே, கேகேஆர் இரு அணிகளிலும் சிறந்த சுழற்பந்துவீச்சாளர்கள் உள்ளனர். நடப்பு ஐபிஎல் தொடரில் கேகேஆர் சுழற் பந்துவீச்சாளர்கள் ஒட்டுமொத்தமாக 37 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர். சிஎஸ்கே சுழற்பந்துவீச்சாளர்கள் 35 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர். இதனால் எந்த அணி சிறப்பாக பேட்டிங் ஆடுகிறதோ அந்த அணிக்குதான் வெற்றிவாய்ப்பு கிடைக்கும். கேகேஆர் அணியில் ஜேசன் ராய், குர்பாஷ், நிதிஷ் ரானா, ரிங்கு சிங், ரஸ்சல் ஆகியோர் அதிரடியாக ஆடக்கூடியவர்கள். சிஎஸ்கே அணியை பொறுத்தமட்டில் இன்றைய போட்டியில் ருதுராஜ், கான்வே ஆகியோர் நல்ல தொடக்கத்தை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஷிவம்துபே அதிரடியாக ஆடி வருவது பலம் சேர்க்கும். இதேபோன்று மொயின் அலி, ரகானேவும் சிறப்பாக ஆடி ரன் குவிக்கவேண்டிய நிலை உள்ளது. சிஎஸ்கே அணியை பொறுத்தவரை எந்த மாற்றமும் இருக்காது என்றே கருதப்படுகிறது. இன்றைய போட்டியில் இரண்டு அணிகளும் வெற்றிக்காக போராடும் என்பதால் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் மோதுகின்றன. சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் 12 போட்டிகளில் ஆடி 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணியின் பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் (575 ரன்), ஜோஸ் பட்லர், கேப்டன் சஞ்சு சாம்சன், ஹெட்மயரும், பந்துவீச்சில் யுஸ்வேந்திர சாஹல், ஆர்.அஸ்வின், டிரென்ட் பவுல்ட், சந்தீப் ஷர்மாவும் நல்ல பார்மில் இருக்கின்றனர்.

இதேபோல் டூ பிளஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு அணி 11 போட்டிகளில் ஆடி 5 வெற்றி, 6 தோல்வியுடன் 10 புள்ளியுடன் உள்ளது. அந்த அணியின் பேட்டிங்கில் கேப்டன் பிளஸ்சிஸ் (576 ரன்), விராட் கோஹ்லி (420 ரன்) மேக்ஸ்வெல்லும், பந்துவீச்சில் முகமது சிராஜ், ஹர்ஷல் பட்டேல், ஹசரங்கா, கரண் ஷர்மா, விஜய்குமார் வைஷாக்கும் வலுசேர்க்கின்றனர். இன்றைய போட்டி இரு அணிக்கும் மிகவும் முக்கியமானதாகும். இதில் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காக வரிந்துகட்டும். இதற்காக வீரர்கள் தங்களது முழு பலத்தையும் வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

The post ஐபிஎல்.லில் இன்று 2 போட்டி; சேப்பாக்கத்தில் சிஎஸ்கே-கேகேஆர் மோதல்: ஜெய்ப்பூரில் பிற்பகல் ஆர்சிபி-ராஜஸ்தான் பலப்பரீட்சை appeared first on Dinakaran.

Tags : IPL ,Lil ,CSK ,KR ,Chepaukam ,PM ,RCB ,Rajasthan ,Balaperit ,Jaipur ,Chennai ,Chennai Cheppakum Ground ,16th IPL T20 cricket match ,Palaperite ,Dinakaran ,
× RELATED சிஎஸ்கே அணியின் முதல் கேப்டனாகும் வாய்ப்பு கிடைத்தது: சேவாக் பேட்டி