×

சத்தியமங்கலம் அருகே விவசாய விளை நிலத்தில் புகுந்து தகரத்தால் அமைக்கப்பட்ட கூரை வீட்டை சூறையாடிய காட்டு யானை

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகில் கடம்பூர் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை செங்காடு, புதுக்காடு மற்றும் அத்தியூர் பகுதிகளில் விவசாய விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது.

இதனால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் மலை கிராம மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். இதற்கிடையே இன்று பகல் நேரத்தில் வனத்தை விட்டு வெளியேறிய காட்டு யானை அத்தியூர் பகுதியில் உள்ள விவசாய விளை நிலங்களில் புகுந்து அப்பகுதியில் உள்ள பலாமரங்களில் பலாப்பழங்களை பறித்து சாப்பிட்டது. பகல் நேரத்தில் காட்டு யானை நடமாட்டத்தை கண்ட அப்பகுதி மக்கள் யானையை விரட்ட முயற்சித்தனர்.

அப்போது அப்பகுதியில் விவசாய நிலத்தில் தகரத்தால் அமைக்கப்பட்ட கூரை வீட்டுக்குள் காட்டு யானை ஆக்ரோசத்துடன் புகுந்து தும்பிக்கையால் வீட்டை சேதப்படுத்தியது. அப்போது வீட்டிற்குள் இருந்த வெள்ளாடு யானையை கண்டு அச்சமடைந்து வெளியே ஓடியது. கிராம மக்கள் கூச்சலிட்டதைத் தொடர்ந்து காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றது.

காட்டு யானை கூரை வீட்டை சேதப்படுத்தும் காட்சியை அப்பகுதி மக்கள் செல்போனில் வீடியோ எடுத்து வாட்ஸ் அப், பேஸ்புக் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது.

The post சத்தியமங்கலம் அருகே விவசாய விளை நிலத்தில் புகுந்து தகரத்தால் அமைக்கப்பட்ட கூரை வீட்டை சூறையாடிய காட்டு யானை appeared first on Dinakaran.

Tags : Sathyamangalam ,Erode ,Kadampur ,Sathyamangalam, ,Erode district ,Sathamangalam ,Dinakaran ,
× RELATED கடம்பூர் மலைச் சாலையில் மூங்கில் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு