×

பைக் மீது லாரி மோதிய விபத்தில் இறந்த மாணவன் குடும்பத்துக்கு ₹32 லட்சம் இழப்பீடு

வேலூர், மே 14: வேலூர் சத்துவாச்சாரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடந்த லோக் அதாலத்தில் அதிகபட்சமாக விபத்தில் இறந்த வேலூர் மாணவன் குடும்பத்துக்கு ₹32 லட்சம் நிவாரணமாக வழங்கப்பட்டது.தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்பேரில் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின் கீழ் வேலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி என்.வசந்தலீலா தலைமையில் நேற்று லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடந்தது.லோக் அதாலத்தை தொடங்கி வைத்து முதன்மை அமர்வு நீதிபதி என்.வசந்தலீலா பேசுகையில், ‘நீண்டகாலமாக வழக்கு நடந்துவரும் நிலையில் இதுபோன்ற மக்கள் நீதிமன்றங்கள் மூலம் உடனடியாக வழக்குகளுக்கு தீர்வு கிடைக்கிறது. இதற்கான வழக்கு செலவினம் அனைத்தையும் ஏழைகளுக்காக சட்ட உதவி ஆணையமே ஏற்கிறது.

மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்கு, நீண்டகாலமாக தீர்வு காணப்படாத சிவில் வழக்குகள், வங்கி வாராக்கடன் வழக்கு, காசோலை வழக்கு, நில ஆர்ஜித வழக்கு, குடும்பநல வழக்கு மற்றும் தொழிலாளர் நல வழக்குகள் என பல்வேறு வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்படுகிறது. இன்று (நேற்று) மிக அதிகபட்சமாக மோட்டார் வாகன விபத்து வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் ₹32 லட்சம் கிடைத்துள்ளது. இதுபோல் அனைவருக்கும் உரிய தீர்வு மக்கள் நீதிமன்றத்தில் கிடைக்கும்’ என்றார்.தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு காஞ்சிபுரத்தில் இருந்து பைக்கில் வேலூர் திரும்பிக் கொண்டிருந்த போது லாரி மோதி இறந்த வேலூர் மக்கானை சேர்ந்த கல்லூரி மாணவர் அபுஅனீப்(20) குடும்பத்துக்கு ₹32 லட்சம் இழப்பீட்டை இன்சூரன்ஸ் கம்பெனி வழங்கியது. அதற்கான காசோலையை நீதிபதி என்.வசந்தலீலா வழங்கினார். இந்த வழக்கில் தனது மகனின் மரணத்துக்கு ₹50 லட்சம் நிவாரணம் கேட்டு அவரது தாயார் பர்வீன்தாஜ் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இதேபோல் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் அடங்கிய 10 தாலுகா நீதிமன்ற வளாகங்களிலும் மக்கள் நீதிமன்றம் நடந்தது. மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்கு, நீண்டகாலமாக தீர்வு காணப்படாத சிவில் வழக்குகள், வங்கி வாராக்கடன் வழக்கு, காசோலை வழக்கு, நில ஆர்ஜித வழக்கு, குடும்பநல வழக்கு மற்றும் தொழிலாளர் நல வழக்குகள் என பல்வேறு வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகள், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர், உரிமையியல் நீதிபதிகள், நீதித்துறை நடுவர்கள் உட்பட அனைத்து நீதிபதிகள், வழக்கறிஞர் சங்கங்களை சேர்ந்தவர்கள், அரசு அலுவலர்கள், வங்கி மேலாளர்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசு போக்குவரத்து கழக பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

The post பைக் மீது லாரி மோதிய விபத்தில் இறந்த மாணவன் குடும்பத்துக்கு ₹32 லட்சம் இழப்பீடு appeared first on Dinakaran.

Tags : Vellore ,Lok Athalam ,National Law Commission ,Vellore Sattuvachari Integrated Court Complex ,Dinakaran ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...