×

‘லோக் அதாலத்’ மூலம் 2,170 வழக்குகளில் ₹7.73 கோடிக்கு சமரச தீர்வு

திருவண்ணாமலை, மே 14: திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில், 2,170 வழக்குகளுக்கு சமரசம் ஏற்படுத்தப்பட்டு, ₹7.73 கோடிக்கு தீர்வு காணப்பட்டன.நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில், சமரச தீர்வுக்கு தகுதி வாய்ந்த மற்றும் இருதரப்பினரும் ஏற்கும் வகையில் தீர்வு காண்பதற்கான வழக்குகள் மட்டும் ‘லோக் அதாலத்’ எனப்படும். தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் விசாரிக்கப்பட்டு உடனடி தீர்வு காணப்படுகிறது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் நேற்று மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி ‘ேலாக் அதாலத்’ எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் செயல்படும் மாற்று தீர்வு மையத்தில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. அதேபோல், ஆரணி, செய்யாறு, வந்தவாசி, செங்கம், போளூர் உள்ளிட்ட மொத்தம் 7 இடங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.

திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்துக்கு, முதன்மை மாவட்ட நீதிபதி மதுசூதனன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அதில், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பி.ஈஸ்வரமூர்த்தி மற்றும் நீதிபதிகள், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வழக்குகளுக்கு தீர்வு கண்டனர்.
அப்போது, மோட்டார் வாகன விபத்து இழப்பீடு, வங்கி சார்ந்த வழக்குகள், சிவில் வழக்குகள், காசோலை வழக்குகள் உள்ளிட்ட வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டன. அதன்படி, மாவட்டம் முழுவதும் நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தின் மூலம், மொத்தம் 7,342 வழக்குகள் விசாரணைக்கு ஏற்கப்பட்டன.

அதில், மாவட்டம் முழுவதும் நேற்று சமரச தீர்வுக்கு உடன்பட்டதன் அடிப்படையில் 2,170 வழக்குகளுக்கு ஒரே நாளில் உடனடியாக சமரசம் ஏற்படுத்தப்பட்டது. அதன்மூலம், வங்கிகள் தொடர்பான வாரா கடன், கல்விக் கடன் உள்ளிட்ட நிலுவை வழக்குகளில் ₹1 கோடியே 52 லட்சத்து 96 ஆயிரத்து 749, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள விபத்து உள்ளிட்ட பிற வழக்குளில் ₹6 கோடியே 21 லட்சத்து 165 உட்பட மொத்தம் ₹7.73 கோடி வசூலிக்கப்பட்டு, வழக்குகளுக்கு உரியவர்களிடம் வழங்கப்பட்டு தீர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர், நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதிபதி மதுசூதனன் மரக்கன்றுகளை நட்டார். இதில், வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.

The post ‘லோக் அதாலத்’ மூலம் 2,170 வழக்குகளில் ₹7.73 கோடிக்கு சமரச தீர்வு appeared first on Dinakaran.

Tags : Lok Adalat ,Tiruvannamalai ,National People's Court ,Tiruvannamalai district ,Dinakaran ,
× RELATED தேர்தல் பிரசாரம் நாளையுடன் ஓய்கிறது *...