×

கைது நடவடிக்கையை கைவிட ஓவியரிடம் ₹3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்ஐ கைது

திருவண்ணாமலை, மே 14: திருவண்ணாமலையில் கணவன்-மனைவி குடும்ப பிரச்னை தொடர்பான வழக்கு விசாரணை மற்றும் கைது நடவடிக்கையை கைவிட ₹3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மகளிர் போலீஸ் ஸ்டேஷன் எஸ்ஐ, லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.திருவண்ணாமலை அடுத்த மங்களம் கீழ்பாலானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிவேல், ஓவியர். அவரது மனைவி பரிமளா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை ஏற்படுவது வழக்கம். அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு வெற்றிவேலுக்கும், அவரது மனைவி பரிமளாவுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, கடந்த 9ம் தேதி திருவண்ணாமலை மகளிர் போலீசில் பரிமளா புகார் அளித்தார். தன்னை அடித்து துன்புறுத்தும் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த புகார் தொடர்பாக ஓவியர் வெற்றிவேலை விசாரணைக்கு அழைத்த மகளிர் போலீஸ் சிறப்பு எஸ்ஐ பரமேஸ்வரி, கைது நடவடிக்கைகளை தவிர்ப்பதற்காக ₹3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். மேலும், பணத்துடன் வருமாறு அவகாசம் அளித்து அனுப்பியுள்ளார். கணவன்-மனைவி பிரச்னைக்கு தீர்வு காணாமல், கைது செய்வேன் என மிரட்டி லஞ்சம் கேட்டதால் அதிர்ச்சியடைந்த வெற்றிவேல், இதுதொடர்பாக திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின் உண்மைத் தன்மையை உறுதி செய்ததால், சம்பந்தப்பட்ட பெண் எஸ்ஐயை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தனர்.
அதன்படி, விஜிலென்ஸ் போலீசார் கொடுத்தனுப்பிய ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை நேற்று மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு எஸ்ஐ பரமேஸ்வரியிடம் ஓவியர் வெற்றிவேல் கொடுத்தார். அதை வாங்கி சரியாக இருக்கிறதா எண்ணிப்பார்த்து பாக்கெட்டில் வைக்கும் போது, அங்கு மறைந்திருந்த விஜிலென்ஸ் டிஎஸ்பி வேல்முருகன் தலைமையிலான குழுவினர் எஸ்ஐ பரமேஸ்வரியை கையும் களவுமாக கைது செய்தனர். அவரிடம், சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடந்தது.மேலும், இது தொடர்பாக பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தனர். அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறப்பு எஸ்ஐ பரமேஸ்வரியை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post கைது நடவடிக்கையை கைவிட ஓவியரிடம் ₹3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்ஐ கைது appeared first on Dinakaran.

Tags : SI ,Thiruvannamalai ,Tiruvannamalai ,
× RELATED 1300 மெட்ரிக் டன் உரம் கொள்முதல் * ரயில்...