
சேலம்: சேலம் ரயில்ேவ ஸ்டேஷனில் ஓடும் ரயிலில் இருந்து இறங்கியபோது கால் தவறி ரயிலுக்கு அடியில் சிக்க இருந்தவரை ஆர்பிஎப் வீரர் காப்பாற்றினார்.
பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், நேற்று முன்தினம் இரவு 10.15 மணிக்கு சேலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தது. பிளாட்பார்ம் 1ல் வந்து நின்ற ரயிலில், பயணிகள் ஏறினர். பின்னர், 10.25க்கு அந்த ரயில் புறப்பட்டது. அப்போது, ஒரு தம்பதி ஓடும் ரயிலில் ஏறுவதற்கு ஓடி வந்தனர். முதலில் கணவர், எஸ்-7 பெட்டியில் ஏறினார். அவரது மனைவி, அந்த பெட்டியில் ஏற முயன்றபோது கால் தவறி பிளாட்பார்மில் விழுந்தார். பதறிய கணவர், ஓடும் ரயிலில் இருந்து இறங்கினார்.
அப்போது கால் தவறி தண்டவாளத்திற்கும், ரயிலுக்கும் இடையில், ரயில் பெட்டியின் கைப்பிடி கம்பியை பிடித்தபடி தொங்கிச் சென்றார்.
ரயிலின் வேகம் அதிகரித்த நிலையில், அவர் ரயிலுக்கு அடியில் சிக்கிவிடுவார் என அங்கிருந்த பயணிகள் கூச்சலிட்டனர். அப்போது, பிளாட்பார்ம்மில் ரோந்து பணியில் இருந்த ஆர்பிஎப் வீரர் அஜித், மிக சாதுர்யமாக செயல்பட்டு, அவரை வெளியே இழுத்து காப்பாற்றினார். விசாரணையில் அவர், கரூர் மாவட்டம் இனாம்கரூரை சேர்ந்த ரவிக்குமார் (50) என்றும் முன்பதிவில்லாத டிக்கெட் எடுத்து ரயிலில் ஏற முயன்றபோது இந்த சம்பவம் நடந்ததும் தெரிய வந்தது. அவருக்கு ஏற்பட்ட லேசான காயத்துக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அடுத்த ரயிலில் கரூர் செல்ல அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.
The post ஓடும் ரயிலில் இருந்து இறங்கியபோது தண்டவாளத்தில் விழுந்தவரை மீட்ட ஆர்பிஎப் வீரர்: சேலம் ரயில்வே ஸ்டேஷனில் பரபரப்பு appeared first on Dinakaran.